நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னையைச் சேர்ந்த பெண் உரிமை இயக்கச் செயலாளர் லீலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அடையாறு, பக்கிங்ஹாம் மற்றும் கூவம் கரையோரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அகற்றி வருகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் ஏழை கூலித் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரமும், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.
குடிசை மாற்று வாரிய சட்டத்தின்படி, அடிப்படை குடியமர்த்துதல் உள்ளிட்ட வசதிகளை அந்த மக்களுக்கு செய்து தருவது அரசின் கடமையாகும். அரசு வழங்கியுள்ள மாற்று இடம் மக்களின் வாழ்வாதாரத்துக்கு உகந்ததாக இல்லை. குடிசைப்பகுதி மக்களுக்கு எதிராக மட்டுமே எடுக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் வசதி படைத்தவர்கள் மீது எடுக்கப்படுவதில்லை. எனவே, குடிசைப்பகுதி மக்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் ஒருபோதும் குறுக்கே நிற்காது. எனவே இதுகுறித்து எந்த இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.