இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைதான சுகேஷ் மற்றொரு மோசடி வழக்கில் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள
Published on
Updated on
1 min read

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷை, மற்றொரு மோசடி வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் போலீஸார் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர்.
கோவை, கணபதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் சமையலறை உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரை, கர்நாடக மாநில முதல்வர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி 2010-ஆம் ஆண்டு ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, பெல்லாரி மாநகராட்சியில் சமையலறை உபகரணங்கள் வழங்கும் ஒப்பந்தம் பெற்றுத்த தருவதாகக் கூறியுள்ளார். அதற்காக, அவர் கூறியபடி ரூ. 2.5 லட்சத்தை வங்கிக் கணக்கில் ராஜகோபால் செலுத்தியுள்ளார். ஆனால், அந்த நபர் கூறியதுபோல ஒப்பந்தம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராஜகோபால் அளித்த புகாரின்பேரில், கோவை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெங்களூரு- பவானி நகரைச் சேர்ந்த சுகேஷ் என்பவர் தனது தந்தையின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணை கோவை 2-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது சுகேஷ் ஜாமீன் பெற்றிருந்தார். ஆனால் வழக்கு விசாரணையில் சுகேஷ் ஆஜராகவில்லை.
இந்நிலையில், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத் தரகராக செயல்பட்ட சுகேஷ், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுகேஷுக்கு கோவை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இதுகுறித்து திகார் சிறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுகேஷை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திகார் சிறைக் காவலர்கள் கோவைக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனர்.
பின்னர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார், சுகேஷை ஜூன் 22-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, சுகேஷை பலத்த பாதுகாப்புடன் போலீஸார் மீண்டும் தில்லிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் சுகேஷ் தரப்பில் வெள்ளிக்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com