

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வதாகத் தகவல் இல்லை என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் நுகர்வோர் தேவைக்கேற்ப 3 லட்சத்து 18 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் அரிசி விலையும் கட்டுக்குள் இருக்கிறது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை. அரிசி சரியான விலையில் எல்லோருக்கும் கிடைக்கும் போது பிளாஸ்டிக் அரிசி ஊடுருவ வாய்ப்பில்லை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புழுங்கல் அரிசி, பச்சரிசி ஆகியவை கிடைக்கிறது.
நடவடிக்கை எடுக்கப்படும்: பிளாஸ்டிக் அரிசியை யாராவது விற்பனை செய்வதாகப் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
துரித உணவகங்களில் பிரைடு ரைசுக்கு பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அது போன்ற குற்றச்சாட்டு உண்மையானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்னணு குடும்ப அட்டை: மின்னணு குடும்ப அட்டைகள் ஒரு கோடி வரை அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இது நீண்ட நடைமுறை. எனவே, அவற்றை முழுமையாக வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஆதாரில் உள்ள விவரங்களே மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெறுகிறது. ஆதாரில் ஆங்கிலத்தில் உள்ள விவரங்களை தமிழில் மொழிபெயர்க்கும் போது மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிழைகளை இணையதளத்துக்குச் சென்று சரிசெய்து கொள்ளலாம் என்றார் அமைச்சர் காமராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.