

மார்த்தாண்டம் அருகே மேல்புறத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை மர்ம நபர்கள் புதன்கிழமை இரவு கல் வீசி உடைத்துள்ளனர். மேலும் செம்மங்காலை பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நினைவுத் தூணும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து, கட்சி நிர்வாகிகள் மேல்புறம் சந்திப்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மீது புதன்கிழமை தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தை தொடர்ந்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது புதன்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், குமரி மாவட்டம் மேல்புறம் பகுதியில் உள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களியல் வட்டாரக் குழு அலுவலகம் மீது மர்ம நபர்கள் புதன்கிழமை இரவில் கல்வீசித் தாக்கியதில் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மேலும், அப்பகுதிக்கு அருகில் செம்மன்காலை பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நினைவுத் தூணும் மர்ம நபர்களால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு: இதைத் தொடர்ந்து, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன் உத்தரவின்பேரில், நாகர்கோவிலில் உள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீடு, மாவட்ட பாஜக அலுவலகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்: இதற்கிடையே, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, அக்கட்சியினர் மேல்புறம் சந்திப்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கட்சி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திலிருந்து மேல்புறம் சந்திப்பு வரை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர். லீமாரோஸ், மார்த்தாண்டம் வட்டார செயலர் அனந்தசேகர், மார்த்தாண்டம் வட்டாரக் குழு உறுப்பினர்கள் ஏ. வின்சென்ட், இ. பத்மநாப பிள்ளை, கொல்லங்கோடு வட்டாரக் குழு முன்னாள் செயலர் விஜயமோகன், உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
குழித்துறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியை புதுதில்லியில் புதன்கிழமை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து, அக் கட்சி சார்பில் குழித்துறை வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்த்தாண்டம் வட்டாரக் குழு செயலர் அனந்தசேகர், வட்டாரக் குழு உறுப்பினர்கள் வின்சென்ட், பத்மநாப பிள்ளை உள்பட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.