புதுவையில் விதிகளை மீறி வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் அருகே மதுபான பார்கள் இயங்கி வருவதாக பேரவையில் எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்தனர்.
பேரவையில் கேள்வி நேரத்தின் போது இதுதொடர்பாக நிகழ்ந்த விவாதம்:
அன்பழகன்: அரசு சார்பு நிறுவனங்களுக்கு எத்தனை கடைகள் உள்ளன. தனியார் பயன் பெறுவதற்காக சில அரசு மதுக்கடைகளை திட்டமிட்டு மூடி உள்ளனர். சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தும் கடைகளை இயக்கி வருகிறீர்கள். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி 42 கடைகள் இயங்க அனுமதி தந்தீர்கள். உப்பளம் தொகுதியில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகே எவ்வாறு மதுபான பார்களை திறக்க அனுமதி தருகிறீர்கள். 14 பார்கள் உள்ளன. விதிகளை மீறி இயங்கி வரும் பார்களை அகற்ற வேண்டும்.
அசோக் ஆனந்து: தட்டாஞ்சாவடி தொகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் பள்ளி அருகிலேயே பார் இயங்குகிறது. 3 கடைகள் உள்ளன.
தீப்பாயாந்தான்: வில்லியனூர் தொகுதியில் இருந்த கடைகள், ஊசுடு தொகுதிகளுக்கு மாற்றி விட்டனர். கிராமங்களில் சாலையில் வெளிப்படையாக பார்கள் இயங்கி வருகின்றன.
பாகூரா இல்லை பாரூரா?
தனவேல்: பாகூரா இல்லை பாரூரா எனக்கூறும் வகையில் 25 பார்கள் இயங்கி வருகின்றன.
அமைச்சர் நமச்சிவாயம்: புதுச்சேரியில் மொத்தம் 464 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் உள்ள மாநில சாலைகளை, மாவட்ட சாலைகளாக மாற்றியதால் உயர்நீதிமன்றம் கடைகளை மாற்ற தடை விதித்துள்ளது. அது புதுவைக்கு பொருந்தாது. 300 மீ இடைவெளி இருக்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்கு தான் இந்த விதி பொருந்தும். நகராட்சியில் 50 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். ஏனைய பகுதிகளில் 100 மீ தூரத்தில் அமைய வேண்டும். விதிகளை மீறி இயங்கி வரும் பார்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அனந்தராமன்: நோனாங்குப்பத்தில் ஏசி திருமண மண்டபம் கட்டித் தர வேண்டும்.
லட்சுமி நாராயணன்: பழைய சமுதாய நலக்கூடங்களை புதுப்பித்த தரலாம்.
அமைச்சர் கந்தசாமி: தொகுதி வாரியாக சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.