ஆன்மிக வளர்ச்சிக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்: டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்

ஆன்மிக வளர்ச்சிக்காக நடத்தப்படும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற ஆதரவை வழங்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் ஸ்ரீபாண்டுரங்கன் திருக்கோயில் ராஜகோபுரம் கட்டுவதற்கான நிதி திரட்டும் 3 நாள் இசை நிகழ்ச்சி தொடக்க விழா
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் ஸ்ரீபாண்டுரங்கன் திருக்கோயில் ராஜகோபுரம் கட்டுவதற்கான நிதி திரட்டும் 3 நாள் இசை நிகழ்ச்சி தொடக்க விழா
Published on
Updated on
1 min read

ஆன்மிக வளர்ச்சிக்காக நடத்தப்படும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற ஆதரவை வழங்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.
சென்னை ஆதம்பாக்கம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் பக்த சமாஜம் சார்பில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோயில் ராஜகோபுரம் கட்டுவதற்கு நிதி திரட்டும் 3 நாள் இசை நிகழ்ச்சி தொடக்க விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியது: ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் அமைப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது பெருமைக்குரியது. இதற்காக எந்தெந்த வழிகளில் நிதி திரட்டலாம் என்பது குறித்து ஆலயத்தின் நிர்வாகக் குழுவினருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். பெரு நிறுவனங்கள், கொடையாளர்கள் நன்கொடை வழங்கும்போது வரிவிலக்கு அளிக்கத் தேவையான வழிமுறைகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
ஆன்மிகம் பரவச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்துக்கு பக்தர்களும், பொதுமக்களும் ஆதரவளிப்பதுடன் தங்களால் இயன்ற நிதியுதவியைச் செய்ய வேண்டும்.
கலாசாரம், பாரம்பரியம், சமயம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் விஷயங்களுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.
தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்: உலகுக்கு முதல்முறையாக அதுவரை யாருமே சொல்லாத அளவுக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தி அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்ற சமதர்ம நோக்கத்தை எடுத்துரைத்த இனம் இந்திய இனம் மட்டும்தான். அந்தளவுக்கு புகழ்வாய்ந்த தேசத்தின் பண்பாட்டுக் கூறுகளையும், நல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் நமது சமயத்தையும், மொழியையும் காப்பாற்ற வேண்டும். இறையுணர்வையும், மொழியுணர்வையும் குழந்தைகளுக்கு ஆரம்பம் முதல் ஊட்டி வளர்ப்பது அவசியம். சமயத்தைத் தமிழும், தமிழை சமயமும் காப்பாற்றி, அழிந்துவிடாமல் பாதுகாத்தன என்பதுதான் வரலாறு.
ஆலயப் பணிகளுக்கும், பள்ளிக் கூடங்கள் கட்டுதல் போன்ற நற்பணிகளுக்கும் வாழ்நாள் முழுவதும் தனது குரல் மூலம் உதவிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடல்களை இங்கு காயத்ரி வெங்கட்ராகவன் இசைக்கவுள்ளார். ஒரு நல்ல பணிக்கு உதவுவதற்காக அவர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்றார் கி.வைத்தியநாதன்.
இதில் ஆதம்பாக்கம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் பக்த சமாஜத்தின் மூத்த உறுப்பினர் ராமச்சந்திர பாகவதர், தலைவர் ரமணி, செயலர் கே.வி.ராமதாஸ், இசைக் கலைஞர் காயத்ரி வெங்கட்ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com