

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடையை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பேரவையில் அவர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியதாவது:
மத்திய அரசின் தடை கால்நடை வளர்ப்போரின் உரிமைப் பறிப்பதாகும். அரசியல் சட்டத்துக்கு புறம்பாக உள்ளது. இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் உணவை உண்ணுவதற்கும், விரும்பும் மதத்தைக் கடைபிடிப்பதற்கும், உடை உடுப்பதற்கும் தனி மனித சுதந்திரம் உண்டும். அதில் தலையிட எவருக்கும் அதிகாரம் இல்லை.
அரசியல் சட்டம் இதற்கான உரிமையை வழங்கியுள்ளது.
மத்திய அரசு இதில் தலையிட்டு மாட்டுக்கறி, ஓட்டகக்கறி, எருமைக்கறி போன்றவற்றை உண்ணக்கூடாது எனக்கூறுவதை ஏற்க முடியாது. புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்தது. அனைத்து தரப்பினரும் பல்வேறு வகை உணவுகளை உண்டு வாழ்கின்றனர்.
உண்ணும் உணவுக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது. பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற சமுதாயத்தினர் மாட்டுக்கறியை உண்கின்றனர். மேலும் முதிர்ச்சி அடைந்த மாடுகளை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் வீதியில் திரிய விடும் நிலை ஏற்படும். அவற்றின் மூலம் உயிர்கொல்லி நோய்கள் ஏற்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசாணையை எதிர்த்து அனைத்து தரப்பினரும் குரல் தந்துள்ளனர், எனவே மேற்சொன்ன மத்திய அரசின் கால்நடை விற்பனை தடை விதிகளை திரும்பப் பெற வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக்கூடாது என்ற தடையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.