திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளால், குப்பைகள் சேகரமாகும் அளவு 8 டன் ஆக குறைந்துள்ளது.
திருநெல்வேலியை பிளாஸ்டிக் கழிவு இல்லாத நகரமாக மாற்ற, சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வாரந்தோறும் புதன்கிழமை பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் சேகரிக்கப்படும். எனவே, வீடுகளிலும், வியாபார நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை புதன்கிழமைதோறும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதன்படி, கடந்த டிசம்பர் மாதம் திட்டம் தொடங்கியபோது வாரம் 14 டன் முதல் 15 டன் வரை பிளாஸ்டிக் குப்பைகள் சேகரமானது. பின்னர், 13 டன், 12 டன் என குறைந்து, இப்போது 8 டன் என்ற அளவில் மேலும் குறைந்துவிட்டது.
ஜூன் 14ஆம் தேதி திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களிலும் சேர்த்து 8 ஆயிரத்து 20 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமானது. இவை அனைத்தும் மாநகராட்சி உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரூ.1.90 லட்சம் அபராதம்: வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பெட்டிக் கடைகள், வீடுகள் என அனைத்து மட்டத்திலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ.1.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான கடைகள் துணிப் பைகளுக்கு மாற்றம் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறியது:
மாநகர பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக பிளாஸ்டிக் கழிவு இல்லாத நெல்லையை உருவாக்க பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைத்து வருகின்றனர்.
இருப்பினும், வியாபாரிகள் சிலர் பிளாஸ்டிக் குப்பைகளை தெருக்களில் வீசுவது, ஹோட்டல்களில் பார்சல் செய்து தர பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது. மாநகராட்சி சோதனையில் இத்தகைய நடவடிக்கை தெரியவந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.
சிமென்ட் ஆலையுடன் இணைந்து புதிய முயற்சி
பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகளின் மேம்பாடுகள் குறித்து திருநெல்வேலி மாநகர் நல அலுவலர் மருத்துவர் பொற்செல்வன் கூறியது:
மாநகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளில் மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை பல்வேறு தனியார் நிறுவனங்கள் மொத்தமாக பெற்றுச் செல்கின்றன. மறுசுழற்சிக்கு பயன்படுத்த இயலாத குப்பைகளை மட்டும் புதன்கிழமைகளில் தனியாக சேகரித்து அவை மாநகராட்சியின் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அறிவியல் ரீதியாக மூடாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது.
இவை தவிர்த்து சிமென்ட் ஆலைகளில் இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தும் வகையிலான திட்டமும் உளளது. இதற்காக இந்தியா சிமென்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மருத்துவக் கழிவுகள் அனைத்தும் நான்குனேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் பாதுகாப்பாக எரித்து அழிக்கப்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.