புதுச்சேரி பொதுப்பணித்துறையில் சமரச வழக்கின் மூலம் ரூ.9 கோடி அளவுக்கு முறைகேடாக தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் புகார் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்விநேரத்தின் போது இதுதொடர்பாக நிகழ்ந்த விவாதம்:
அன்பழகன்: சமரசப் பேச்சுவார்த்தை மூலம் பொதுப்பணித்துறையில் எவ்வளவு தொகையை அரசு வழங்கியுள்ளது? இதற்கு யார் தலைவர். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதா. ரூ.16.9 கோடி இதன் மூலம் வீணடிக்கப்பட்டுள்ளது. ரூ.1.8 கோடி வட்டியாக தரப்படுகிறது. ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியை சமரச பேச்சுவார்த்தை மையத்தில் வைத்துள்ளனர். ஒரு கோஷ்டியாக செயல்பட்டு முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். நகரப்பகுதியில் பெருவாய்க்கால் பணிக்கு அரசாணை தரப்பட்டதா?
எந்த அரசாணையும் இல்லாமலே ரூ.30 கோடிக்கு தனியார் நிறுவனத்துக்கு பணி தரப்படுகிறது. இடையில் சில பிரச்னைகளால் பணியை விட்டு சென்று விடுகிறார். அவருக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து சமரசப்பேச்சு மூலம் ரூ.9 கோடி அவருக்கு தரப்பட்டுள்ளது.
அமைச்சர் நமச்சிவாயம்: ஒவ்வொரு வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் சமரசம் செய்து வருகின்றனர். முந்தைய ஆட்சியில் தான் இதுபோன்ற திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியாகியது. காங்கிரஸ் அரசு பதவியேற்று ஒரு சமரசப்பேச்சு நடத்தவில்லை. ரூ.16.9 கோடிக்கான சமரசப்பேச்சுவார்த்தை மூலம் தொகை வழங்குவது கடந்த ஆட்சியில் நடந்த திட்டங்களுக்கு தான். இது முந்தைய ஆட்சியின் தவறு. அவர் ரூ.4 கோடி அளவுக்கு பணி செய்துள்ளார்
அரசாணை வாங்காமல் பணி செய்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்காலத்தில் சமரச வழக்கு வராத வகையில் அரசு செயல்படும்.
லட்சுமி நாராயணன்: சமரச வழக்குகள் நீதிமன்றத்தில் தான் வைத்து தீர்வு காண வேண்டும். அரசு பணம் வீணாகி வருகிறது. இதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.
சிவா: எந்த உத்தரவும் இல்லாமல் பணியை எவ்வாறு செய்யலாம். அந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.9 கோடி தரப்பட்டது பெரிய மோசடி. முந்தைய அரசின் முறைகேடுக்கு ஏன் துணை போகிறீர்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: இப்பிரச்னை தொடர்பாக மேல்முறையீடு செய்ய சட்டத்துறை ஆலோசனை கோரப்படும். முறையான விசாரணை நடத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.