புதுவையில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் வேளாண், கல்வி, மின் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அமைச்சர் கமலக்கண்ணன் பதிலளித்துப் பேசிக் கொண்டிருந்த போது, குறுக்கிட்ட எம்.எல்.ஏ. அன்பழகன், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு இடம்பெறவில்லை. அவர்களுக்கு நிவாரணத் தொகையை எப்போது வழங்குவீர்கள்? என்று கேட்டார்.
அமைச்சர் கமலக்கண்ணன்: புதுவை, காரைக்காலில் வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளது. விரைவில் வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.
அன்பழகன்: 8 மாதங்களாகியும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அரசு விவசாயிகளை வஞ்சித்துவிட்டது. தொடர்ந்து, விவசாயிகளை ஏமாற்றும் வகையில் வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருகிறது.
இதைக் கண்டித்து நாங்கள் (அதிமுக அம்மா அணி) வெளிநடப்பு செய்கிறோம் என்றார். இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் பேரவையில் இருந்து வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலும் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினார்.
ஆனால், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.வான டிபிஆர்.செல்வம் வெளிநடப்புச் செய்யாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். 10 நிமிடங்களுக்குப் பின்னர் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அவைக்குத் திரும்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.