ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய தேர்தல் ஆணையம் சர்வாதிகாரியாகக் கூடாது! ராமதாஸ்

ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய தேர்தல் ஆணையம் சர்வாதிகாரியாகக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய தேர்தல் ஆணையம் சர்வாதிகாரியாகக் கூடாது! ராமதாஸ்
Updated on
2 min read

ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய தேர்தல் ஆணையம் சர்வாதிகாரியாகக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஐயத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டிய ஆணையம் அதன் செயல்பாடுகளை யாரும் விமர்சிக்கக்கூடாது என்ற மனநிலைக்கு ஆளாகியிருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட ஆபத்தாகும்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாவது புதிதல்ல. காலம் காலமாகவே ஆணையத்தின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுத் தான் வருகின்றன. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படும் போது அதை அரசியல் கட்சிகள் பாராட்டுவதும் நடந்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இப்போதைய கோபத்துக்குக் காரணம், அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாற்றியது தான்.  இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகளை செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்த நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரத்தில் நேர்மையான, சுதந்திரமான முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற தனது ஜனநாயகக் கடமையை தேர்தல் ஆணையம் செம்மையாக நிறைவேற்றியிருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பெரும்பான்மை பதிலாக இருக்கும். அண்மைக் காலத்தில் தேர்தலில் படைபலம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கான பெருமை முழுவதும் தேர்தல் ஆணையத்தையே சேரும். ஆனால், அதிகார பலமும், பண பலமும் கட்டுப்படுத்தப்பட வில்லை என்பதை தேர்தல் ஆணையம் ஒப்புகொள்ள வேண்டும். படைபலத்தை ஒழித்ததற்கான பாராட்டை ஏற்றுக்கொள்ளும் ஆணையம், பணபலத்தை ஒழிக்காததற்கான விமர்சனத்தையும் ஏற்கத் தான் வேண்டும்.

உதாரணமாக தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 2005-ஆம் ஆண்டில் நடைபெற்ற கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் தொடங்கி இன்று வரை நடைபெற்ற தேர்தல்களில் பணபலம் தான் பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானித்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்கள், 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டப் பணம் தமிழகத்தில் தான் மிக அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டது என்பது தேர்தல் ஆணையமே  ஒப்புக் கொண்ட விஷயமாகும். அதுமட்டுமின்றி, இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் மிக அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம்  வினியோகிக்கப்பட்டதாகக் கூறி அத்தொகுதிகளில் நடைபெறவிருந்த தேர்தல்களை ரத்து செய்தது. அதன்பின் அத்தொகுதிகளில் நடந்த தேர்தலில் பணம் வெள்ளமாக பாய்ந்ததை ஆணையம் தடுக்கவில்லை. மற்ற தொகுதிகளில் பணம் பாய்ந்ததற்காக அத்தேர்தல்களை ரத்து செய்யவும் ஆணையம் முன்வரவில்லை.

அதைத் தொடர்ந்து சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் வாக்காளர்களுக்கு தலா ரூ.4000, திமுக சார்பில் தலா ரூ.2000 வீதம் பணம் வழங்கப் பட்டதைத் தொடர்ந்து இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் தோல்வி தான் எனும் போது அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், அடுத்து வரும் தேர்தல்களில் இதைத் தடுப்பதற்கான திறமை மற்றும் துணிச்சலும் தேர்தல் ஆணையத்திற்கு தேவை. ஆனால், இந்தத் தகுதிகளை தேர்தல் ஆணையம் பெற்றதாகத் தெரியவில்லை. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் நஜீம் ஜைதியை பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பலமுறை சந்தித்து ஆலோசனை வழங்கியிருக்கிறார். ஆனால், தவறுகளை திருத்திக் கொள்ள முன்வராத தேர்தல் ஆணையம், தனது செயல்பாடுகளை எவரும் விமர்சிக்கக் கூடாது என்று கூறுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

ஜனநாயகமும், விழிப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கூட கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இத்தகைய நீதிமன்றங்களுக்குக் கூட நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து விமர்சனம் செய்பவர்களை தண்டிக்கக் கூடாது என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், தம்மை விமர்சிப்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் வழங்கப் படவேண்டும் என தேர்தல் ஆணையம் கோருவது சர்வாதிகாரமாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான விமர்சனம் மிகவும் அவசியமாகும். தேர்தல் ஆணையம் மீது ஆரோக்கியமற்ற வகையில் விமர்சனங்கள் செய்யப்பட்டால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆரோக்கியமான விமர்சனங்களை ஆலோசனைகளாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதை செய்தவர்களை எதிரிகளாக நினைத்து அவர்களுடன் போரிட ஆணையம் துடிக்கக் கூடாது. அது தேர்தல் ஆணையத்தின் வேலையும் அல்ல. எனவே, இது தொடர்பான கோரிக்கையை திரும்பப்பெற்று, நேர்மையான, சுதந்திரமான தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்யும்படி  மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அதில் வெற்றி பெற தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com