

ஜவுளி உற்பத்தி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து கரூரில் இன்று ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சங்கத் தலைவர் ஆர். தனபதி கூறியது:
மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த உள்ளது. பருத்தி நூலுக்கு 5 சதவீதம், பாலியஸ்டர் நூலுக்கு 18 சதவீதம், ஜவுளி விற்பனைக்கு 5 சதவீதம் என அதில் வரிவிதிக்கப்பட்டுள்ளது. சாயமிடுதல், நெசவு, தையல், முடி போடுதல், பேக்கிங் உள்ளிட்ட ஜாப் வொர்க் உற்பத்திக்கும் வரிவிதித்துள்ளனர். இதனால், சிறு மற்றும் குறுந்தொழில்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.
எழுதப் படிக்கத் தெரியாத விவசாய மக்கள்தான் பகுதிநேர வேலையாக இத்தொழில்களை செய்து வருகின்றனர்.
இவர்கள் கணினி வைத்து ஆன்லைனில் பதிவு செய்து சரக்கு அனுப்பும்போது, ஆன்லைன் வவுச்சர் அனுப்புவது, வாங்கும் கூலிக்கு வரி போட்டுக் கட்டுவது என்பது அவர்களால் இயலாத காரியம். எங்கள் பெரும்பகுதி வியாபாரம் வடமாநிலங்களில் தான் மேற்கொள்ளப்படுகிறது. 30-ம் தேதி அனுப்பும் பில்கள் அவர்களுக்கு 10-ம் தேதி கிடைத்து ஆன்லைனில் கொள்முதல் கணக்கில் வரவு வைப்பதை நாங்கள் தான் கண்காணிக்க வேண்டும் என்பது வடமாநில வியாபாரிகளிடம் சாத்தியமில்லாதது.
அனுப்பும் சரக்குகள் நேரத்திற்குள் லாரியில் செல்லவில்லை என்றால், நாங்கள் ஆன்லைனில் பதில்சொல்ல வேண்டும் என்பது போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, ஜிஎஸ்டியில் இருந்து ஜவுளி தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
ஜவுளி தொழிலை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி ஜிஎஸ்டியை எதிர்த்து கரூரில் வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இதில், கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம், கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம், நூல் வணிகர்கள் சங்கம், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் உள்ளிட்ட ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்படும். 50,000 தொழிலாளர்கள் இவற்றில் பங்கேற்கின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.