

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது.
சேப்பாக்கத்தில் தொடங்கிய பேரணிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தார். தலைமைச் செயலகத்தை நோக்கிச் சென்ற இந்தப் பேரணி பாதி வழியிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்தப் பேரணியில் கட்சியின் தேசியப் பொதுச் செயலர் முரளிதரராவ், மகளிர் அணியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பேரணியில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
மதுக்கடைக்கு எதிராகப் போராடும் பெண்களுக்கு ஆதரவாக இந்தப் பேரணி நடத்தப்படுவதாகவும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும் வரை போராடுவோம் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் அப்போது தெரிவித்தார்.
பேரணியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேசியதாவது: வருமானத்துக்காக திமுகவும், அதிமுகவும் டாஸ்மாக்கை ஊக்கப்படுத்துகின்றன. இதனால் மக்களின் வருமானம், குடும்பம், ஆரோக்கியம், குழந்தைகளின் படிப்பு ஆகியன பாதிக்கப்படுகின்றன. மதுவால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
தமிழகத்தையும், தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும் பாஜக நிச்சயம் பாதுகாக்கும். தமிழக மக்களுக்கு டாஸ்மாக் மதுவுக்குப் பதிலாக பசும்பால் கொடுப்போம். அதன் மூலம் தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் பெருக்குவோம் என்றார் முரளிதரராவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.