

சென்னை கோடம்பாக்கத்தில் துணிக் கடை உரிமையாளர் வீட்டிலிருந்து ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, மார்ச் மாதத்துக்குப் பின்னர் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனி 2 -ஆவது தெருவைச் சேர்ந்த ரா.தண்டபாணி (47) வீட்டில் மதிப்பு இழக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தியாகராய நகர் காவல் துணை ஆணையர் பி.சரவணனுக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தியாகராய நகர் உதவி ஆணையர் செல்வன் தலைமையில் தனிப் படையை அமைத்து, தண்டபாணி வீட்டில் சோதனை நடத்த அவர் உத்தரவிட்டார்.
ரூ.45 கோடி பறிமுதல்: தனிப்படை போலீஸார், அந்த வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு திடீர் சோதனை செய்தனர். அதில், வீட்டின் இருப்பு அறையில் 12 அட்டை பெட்டிகளில் மதிப்பு இழக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ரூ.45 கோடி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தண்டபாணியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவல்கள்: ஜாக்காரியா காலனி 2 -ஆவது தெருவில் காவலர் சீருடைகள், காவலர் சீருடைக்குத் தேவையான முத்திரைகள், தொப்பி, காலணிகள் ஆகியவற்றை விற்கும் கடையை தண்டபாணி தனது சகோதரருடன் இணைந்து நடத்தி வருகிறார். இந்தக் கடையில் இருந்து திரைப்பட படப்பிடிப்புக்குத் தேவையான ஆடைகளை வாடகைக்கு அளிக்கும் தொழிலையும் செய்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒரு நகைக் கடை உரிமையாளரிடம் மதிப்பு இழக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுப்பதற்கு கமிஷன் அடிப்படையில் தண்டபாணி வாங்கியுள்ளார். அந்தப் பணமே போலீஸாரிடம் சிக்கியுள்ளது.
இப்பிரச்னையில் தண்டபாணியிடம் பணம் கொடுத்த நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர். அதே வேளையில் தண்டபாணி யாரிடம் பணத்தைக் கொடுத்து மாற்றுவதற்கு திட்டமிட்டார் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டது குறித்து மத்திய வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவுக்கு போலீஸார் தகவல் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.