

சென்னை: அண்ணா பல்கலையின் பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், திட்டமிட்டபடி, நாளை பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இன்றி பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என்றும், எனவே, பட்டமளிப்பு விழாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது.
துணைவேந்தர் இன்றி பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு தரப்பின் வாதத்தை ஏற்று பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் வேறு ஒருவர் கையெழுத்திட்டு வழங்கிய பட்டத்தை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்துவிட்டன என்று கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்றும் தெரிவித்துவிட்டது.
எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா திட்டமிட்டபடி நாளை காலை நடைபெறும் எனவும், இவ்விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஐ.அருள் அறம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக் குழு கூட்டம், கடந்த மார்ச் 30 -ஆம் தேதி நடைபெற்றது. அதில் பல்கலைக்கழகத்தின் 37 -ஆவது பட்டமளிப்பு விழாவை வரும் 19 -ஆம் தேதி (மே 19) நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக இருக்கிறது. துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்துவது, பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் வேறு ஒருவர் கையெழுத்திட்டு வழங்கிய பட்டத்தை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்துவிட்டன. சென்னை பல்கலைக்கழத்தில் துணைவேந்தர் இல்லாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் உள்ளது.
எனவே, துணைவேந்தரை விரைவாக நியமிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.