துணைவேந்தர் பதவிகளை நிரப்பக் கோரி மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை உரிய காலவரையறைக்குள் நிரப்பக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை உரிய காலவரையறைக்குள் நிரப்பக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் ஏ.பாடம் நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன.
இன்னும் இரண்டு மாதங்களில், ஒன்றிரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிக் காலமும் நிறைவடைய உள்ளன. எனவே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பதவிக் காலம் முடியும் முன்னரே, துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவை அமைக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட காலவரையறைக்குள் துணைவேந்தர் பதவியை நியமிப்பதற்கான விதிகளை கொண்டு வர வேண்டும்.
தற்போது காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக பல்கலைக்கழக வேந்தரிடம் (பொறுப்பு ஆளுநர்) கடந்தாண்டு ஆகஸ்ட 27 மற்றும் நவம்பர் 11-இல் மனு அளித்தேன். எனினும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால், காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதோடு, துணைவேந்தர் இல்லாமல் எந்த பல்கலைகழகத்திலும் பட்டமளிப்பு விழா நடத்தக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிரப்பக் கோரிய மனுவுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர், உயர் கல்வித் துறைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com