நெல்லை, திருச்சியில் இடியுடன் மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டத்தில் சில தினங்களாக 105 முதல் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், மேலச்செவல், பேட்டை, சுத்தமல்லி, பெருமாள்புரம், மூலைக்கரைபட்டி, நான்குனேரி, சுத்தமல்லி, சுரண்டை, வீரகேரளம்புதூர், முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் உள்பட பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில், கருங்குளம் பேருந்து நிறுத்தம் அருகில், பெருமாள்புரம உள்பட பல இடங்களில் சாலையோரமாக நின்ற மரங்கள் சாய்ந்தன.
பாளையங்கோட்டை தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரடைந்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் மின்வயர் அறுந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் வசந்தாபுரம் வடக்கு, தெற்குத் தெரு மற்றும் வேடவர்காலனியில் முப்புடாதி அம்மன் கோயில் தெருவில் பல வீடுகளில் மேற்கூரைகள் சரிந்தன.
திருச்சியில்...
திருச்சியின் வெப்பநிலை கடந்த சில நாள்களாக 105 டிகிரிக்கு மேல் இருந்த நிலையில் வியாழக்கிழமையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், மாலை 5 மணிக்கு மேல் பலத்த காற்று வீசத் தொடங்கியது.
மாலை 6 மணிக்கு மேல் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
தில்லைநகர், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்கள், உறையூர் உள்ளிட்ட மாநகர்ப் பகுதிகள், திருவெறும்பூர், நவல்பட்டு, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்தது.
இதன் காரணமாக திருச்சி நீதிமன்றம் அருகில் தீயணைப்புத் துறை அலுவலக வளாகத்திலிருந்த மரம் சாய்ந்து விழுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் காற்றால் முறிந்து விழுந்தன.
திருவெறும்பூர் ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரது வீட்டின் மாடியில் நிறுவப்பட்டிருந்த தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தின் கோபுரம் சூறைக் காற்று காரணமாக சரிந்து விழுந்தது. அருகிலிருந்த பிற வீடுகளும் சேதமடைந்தன.
பலத்த காற்றின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாலை 5 மணி முதல் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com