

சென்னை: வருமான வரி ஏய்ப்புப் புகார் தொடர்பாக பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என சுமார் 55 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை ஒத்தவாடி ஜெகதாம்பாள் காலனியில் தனியார் சமையல் எண்ணெய் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சூரிய காந்தி ரீபைண்ட் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாமாயில், பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு சமையல் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது.
சென்னை மேடவாக்கம் வேங்கைவாசல், விருதுநகர், பழனி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா, கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோவா ஆகிய இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள இந்த நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி வரை வணிகம் செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
55 இடங்களில் சோதனை: இந்தத் தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அந்த சமையல் எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள் என 55 இடங்களில் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனர்.
ராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் முனுசாமி வீடு, அங்குள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், வேங்கைவாசலில் உள்ள சுத்திகரிப்பு ஆலை, வண்ணாரப்பேட்டையில் உள்ள கிட்டங்கி, நகைக்கடை என சென்னையில் மட்டும் 37 இடங்களில் நடைபெற்றது.
அதேபோல தமிழகத்தைத் தவிர்த்து மும்பை, கோவா, பெங்களூரு, காக்கிநாடா ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் அலுவலகங்களிலும், ஆலைகளிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
இச் சோதனையில் அந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் இந்த சோதனை இரவையும் தாண்டியும் நீடித்தது. தொடர்ந்து இன்று காலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.