

புதுச்சேரி மாநிலத்தில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 50 மெ டன் திறனுடைய மின் எடை மேடைகள் அமைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அவர் இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசியது:
விவசாயத்துக்கு ஊக்கம் தரும் வகையில் மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு நிகழாண்டில் இருந்து இலவச மின்சாரம் தரப்படுகிறது.
மின்தேசிய வேளாண் விற்பனை மூலம் மின் பணித்தள முறைக்கு மாறி விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களுக்கு ஆதாயமிக்க விலை பெறுவதை உறுதி செய்ய மத்திய அரசின் நிதி ரூ.75 லட்சத்தில் உள்கட்டமைப்புகள் செய்யப்படும்.
புதுச்சேரி காரைக்காலில் நெல் தானியங்கள் ஈரப்பதத்தை குறைத்து சந்தை மதிப்பை உயர்த்தும் வகையில் தானிய உலர்த்திகள் வழங்கப்படும். 4 பிராந்தியங்களிலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 50 மெ டன் மின்எடை மேடைகள் அமைக்கப்படும்.
கடந்த ஆண்டு 7362 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் 12500 ஹெக்டேர் சம்பா, நவரை பயி்ர்களை காக்க பயிர்க்காப்பீடு தவணைத் தொகை முழுவைதும் அரசே வழங்கும்.
பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தில் புதுவையில் ரூ.972.9 கோடியிலும், காரைக்காலில் ரூ.1195.57 கோடியிலும், ஏனாமில் ரூ.85.66 கோடியிலும், மாஹேயில் ரூ.23.16 கோடியிலும் நீர் ஆதார கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
சொட்டு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த புதுவையில் ரூ.9.22 கோடியும், காரைக்காலில் ரூ.15.7 கோடியும், ஏனாமில் ரூ.2 கோடியும், மாஹேயில் ரூ.63 லட்சமும் செலவிடப்படும்.
நிலத்தடி நீர் பாசன குழாய் மானியம் அமைக்கும் பொருட்டு பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 50 சதவீதம், அட்டவணை இன மக்களுக்காக 70 சதவீதம் மானியமாக ரூ.30 ஆயிரம் தரப்படுவது நிகழாண்டு முதல் ரூ.1 லட்சமாக உயர்த்தி தரப்படும்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நாட்டு ரக பசுமாடுகளை விவசாயிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இயற்கை உரங்களை விவசாயிகளே தயாரிக்க ரூ.3.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு
கால்நடை கோழி வளர்ப்பை பெருக்கும் பொருட்டும் பால், முட்டை இறைச்சி உற்பத்திக்கு முறையே 48,500 மெ.டன், 113.60 லட்சம், 14,615 மெ.டன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுளளது.
நடமாடும் கால்நடை பராமரிப்பு சேவை
புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மூலம் சென்று இனப்பெருக்க, சுகாதாரச் சேவைகளை வழங்க நடமாடும் கால்நடை பராமரிப்புச் சேவைகள் தரப்படும்.
கால்நடை கணக்கெடுப்பு
மத்திய அரசின் உதவியுடன் 16.7.17 முதல் 15.10.17 வரை 20-வது ஐந்தாண்டு கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்படும். பால் உற்பத்தியைப் பெருக்க 1000 கறவை மாடுகள் 75 சத மானியத்தில் விவசாயிகளுக்கு தரப்படும். கால்நடைகளுக்கு 12 இலக்கம் கொண்ட தனித்திற அடையாள எண் (UIB) அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கால்நடை மருத்துவமனை ரூ.25 லட்சம் செலவில் புனரமைக்கப்படும்.
மீன்வளம்-மீனவர் நலம்
மீன் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நீலப்புரட்சி என்ற மத்திய அரசு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
நன்னீர் மீன்வளர்ப்பு மேம்பாடு திட்டத்தில் ரூ.29.7 லட்சத்தில் 7 ஹெக்டேர் பரப்பிலும், உவர்நீர் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.20 லட்சம் செலவில் 4 ஹெக்டேர் பரப்பிலும் மேற்கொள்ளப்படும். பாரம்பரிய படகை இயந்திர மயமாக்கல் திட்டத்தில் ரூ.1.20 கோடி 167 பயனாளிகளுக்கு 50 சத மானியத்தில் தரப்படும்.
மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 21950 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.11.97 கோடி தரப்படும். பெரியகாலாப்பட்டு, நல்லவாடு, பன்னித்திட்டு மீனவ கிராமங்களில் டீசல் பங்குகள் ஏற்படுத்தப்படும்.
மீன்வளம் மீனவர் மேம்பாட்டுக் கழகம்
புதுச்சேரி யூனியன் பிரதேச மீன்வளம் மற்றும் மீனவர் மேம்பாட்டுக்கழகம் அமைக்கப்படும். ஏனாம் சாவித்திரி நகரில் பனிக்கட்டி, குளிர்சாதன நிலையம் அமைக்கப்படும்
காரைக்கால், ஏனாம் துறைமுகங்கள் 2-ம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்படும். புதுக்குப்பத்தில் நிலுவையில் உள்ள மீன்பிடி படகு ஜெட்டிப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.