அதிமுக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

சேலார் பேனல்கள் அமைக்க நிலம் வாங்குவது தொடர்பான ரூ. 50 லட்சம் மோசடி புகார் குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

சேலார் பேனல்கள் அமைக்க நிலம் வாங்குவது தொடர்பான ரூ. 50 லட்சம் மோசடி புகார் குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது:
திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் லோகநாதன் (54). இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் 50 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சோலார் பேனல்கள் அமைப்பது குறித்து 2015ஆம் ஆண்டு காமராஜ் என்பவர் லோகநாதனை அணுகியுள்ளார்.
இவர், தன்னை அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமி என்றும், சோலார் பேனல்கள் அமைக்க 200 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், மேலும் 150 ஏக்கர் வாங்கித் தரும்படியும் கூறி, ரூ. 20 லட்சத்தை முன்பணமாக லோகநாதனுக்கு, காமராஜ் கொடுத்துள்ளார்.
இதையடுத்து லோகநாதன் தனது நிலத்துக்கு அருகில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் பேசி, ரூ. 50 லட்சத்துக்கு மேல் முன்பணம் கொடுத்து, 150 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதற்குரிய ஆவணங்களை காமராஜிடம் லோகநாதன் கொடுத்துள்ளார். அதன் பின்னர் காமராஜ், லோகநாதனை தொடர்பு கொள்ளவே இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன், காமராஜை 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் நேரில் பார்த்து, நிலம் வாங்கிக் கொடுக்க தன்னுடைய பணம் ரூ. 50 லட்சம் வரை செலவாகியுள்ளது, அதை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், காமராஜ் கொடுக்கவில்லையாம். இதனால் வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காமராஜ் தரப்பிலிருந்து லோகநாதனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அடிக்கடி மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்திலும், காவல்துறை உயரதிகாரிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து, நிலம் வாங்குவதாக மோசடி செய்து, ரூ. 50 லட்சம் வரை இழப்பு ஏற்பட காரணமாக இருந்து மிரட்டல் விடுத்த நத்தம் விஸ்வநாதன், அவரது ஆதரவாளர்கள் காமராஜ், அருண்குமார், பாஸ்கர் ஆகிய நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி திருச்சி மாவட்ட 2-ஆவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் லோகநாதன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர கண்ணன், 4 பேர் மீதும் மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கே.கே. நகர் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com