தமக்கு அசல் ஓட்டுநர் உரிமம் கிடைக்காததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர், சென்னை திருவான்மியூரில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி வியாழக்கிழமை போராட்டம் நடத்தினார். திருவான்மியூர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (46).இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் ஓட்டும் ஆட்டோவின் உரிமையாளர், சில நாள்களுக்கு முன்பு முத்துக்குமாரிடம் அசல் ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே ஆட்டோ ஓட்டும்படி கூறியுள்ளார். மேலும் அவர், அசல் ஓட்டுநர் உரிமத்தை காட்டிவிட்டு, ஆட்டோவை எடுத்துச் செல்லும்படி கூறினாராம்.
முத்துக்குமாரின் அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டதால், மீண்டும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அவர் திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றார்.ஆனால், அங்குள்ள அதிகாரிகள்,முத்துக்குமாருக்கு சரியான பதில் தெரிவிக்காமல், இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக முத்துக்குமார் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தினமும் சென்றும், வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியவில்லை.
இந்நிலையில் முத்துக்குமார், வியாழக்கிழமை திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலத்துக்குச் சென்றார். பின்னர் திடீரென தான் கொண்டு சென்ற பெட்ரோலை உடல் மீது ஊற்றிக் கொண்டு, அருகே இருந்த செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறினார். ஆனால் அவரிடம் தீப் பெட்டி இல்லாததினால், தீ வைத்துக் கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே முத்துக்குமார் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதேநேரத்தில் பொதுமக்கள், முத்துக்குமாரை சமாதானப்படுத்தி அவரை செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் முத்துக்குமாரிடம் போலீஸார் இதுகுறித்து விசாரணை செய்தனர். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.