பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நரேந்திர தபோல்கர், பன்சாரே, கலபுர்கி ஆகியோர் வரிசையில், வகுப்புவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இப்போது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சீர்குலைத்து வரும் இதுபோன்ற சக்திகளின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளின் கடமை என்பதை இந்தப் படுகொலைகள் உணர்த்துகின்றன.
கௌரி லங்கேஷ் படுகொலைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, உரிய தண்டனை வழங்க வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான கெளரி லங்கேஷை வகுப்புவாத சக்திகள் சிலர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இப்படுகொலை வழக்கை விசாரிக்க 'சிறப்புப் புலனாய்வுக் குழு' ஒன்றை உடனடியாக கர்நாடக அரசு அமைக்க வேண்டும். கொலையாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டித்திட வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.