புளூவேல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் தகவல்

புளூவேல் விளையாட்டை இணைய தளங்களில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய, மாநில அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது
Published on
Updated on
1 min read

புளூவேல் விளையாட்டை இணைய தளங்களில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய, மாநில அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளூவேல் இணைய தள விளையாட்டில் மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்தது. 
அதனடிப்படையில் பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில்,” குழந்தைகள் கணினி மற்றும் செல்லிடப்பேசியில் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் முக்கியமான கடமை. புளூவேல் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கிவேண்டும். செல்லிடப்பேசிகளில் இருந்து இந்த விளையாட்டுக்களை நீக்க வேண்டும். புற்றுநோய் போல் பரவி வரும் இந்த விளையாட்டின் கொடூர வளர்ச்சியைத் தடுக்க பெற்றோரும், காவல்துறையினரும்ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்போதைய நிலையில் இந்த விளையாட்டைத் தடுக்க போதிய அமைப்பு முறை இல்லை. இதனால் பொதுமக்களின் நலன் கருதி நீதிமன்றம் இதில் தலையிடுகிறது. இதனை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, புளூவேல் விளையாட்டை பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரனை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிபிசிஐடி தரப்பில் எஸ்.பி.அரவிந்தன் ஆஜராகி, புளுவேல் விளையாட்டை அங்கீகரிக்கப்பட்ட இளையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாது. ரஷ்யாவின் இணைய தளமான வி கனெக்ட் மற்றும் ஆன்ûலைன் குருமிங் ஆகியவற்றில் உறுப்பினராகும் நபர்கள் குறித்த முழு விபரங்களையும் அறிந்த பின்னரே அவர்களுக்கு புளூவேல் விளையாட்டுக்கான தொடர்புகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த தொடர்புகள் எவ்வாறு பகிரப்படுகின்றன? யார் விளையாடுகிறார்கள்? என்பதை அறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டை தொழில்நுட்ப ரீதியாக தடை செய்வது ஒருபுறம் நடந்து வரும் அதே நேரத்தில் குழந்தைகள், இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது என்றார். 
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உதவிக்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ராஜேந்திரன் வாதிடும்போது, இணையதள மையங்கள் தங்கள் பயன்பாட்டில் இருக்கும் இணையதளங்கள் அரசின் அங்கீகாரம் பெற்றவையா? பாதுகாப்பானவையா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சான்றிதழமை அரசிடமிருந்து பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், புளூவேல் விளையாட்டை தடை செய்யுமாறு கூகுள் இந்தியா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட வலைதளங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள், மனநல ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றார். 
அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள், வழக்குத் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்காக விசாரணையை செப்.11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com