ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது: மு.க. அழகிரி கடும் விமரிசனம்
By DIN | Published on : 27th December 2017 11:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சென்னை: ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.
செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க. அழகிரி இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோல்வி அடைந்தது ஏன்? இதில் இருந்தே ஸ்டாலின் எவ்வாறு செயல்படுகிறார் என்பது தெரிய வருகிறது.
ஸ்டாலின் உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. திமுகவினரின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டதாக துரைமுருகன் கூறியுள்ளார். திமுகவினரை விலை போனதாகக் கூறலாமா? என்று கேள்வி எழுப்பினார் அழகிரி.
தினகரன் வெற்றி பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, தினகரன் தொடக்கம் முதலே களப்பணி செய்து வெற்றி பெற்றுள்ளார். சுயேச்சையாக போட்டியிட்ட தினகரனின் சின்னம் வாக்குப்பெட்டியில் 33வது எண்ணில் இருக்கும் குக்கர். ஆனால், மக்களுக்கு மிகவும் பரிச்சயமான உதய சூரியன், இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றை எல்லாம் தாண்டி 33வது இடத்தில் இருக்கும் குக்கர் சின்னத்துக்கு வாக்குகள் விழுந்துள்ளன. இதற்கு காரணம், மக்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு இருக்கிறது என்று அர்த்தம்.
வெறுமனே வேனில் ஏறி பிரசாரத்துக்கு போய்விட்டால் வெற்றி கிடைக்காது. களப்பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பணப்பட்டுவாடா நடக்கும் போதெல்லாம் திருமங்கலம் ஃபார்முலா என்பது வழக்கமாகிவிட்டதே என்ற கேள்விக்கு, பணம் மட்டும் இருந்தால் வேட்பாளர் ஜெயிக்க முடியாது. தோல்வி அடைந்த உடன், பண நாயகம், ஜனநாயகம் தோல்வி என்று கூறுவது வழக்கமாகவிட்டது. தொகுதிக்காக உழைப்பு வேண்டும். திருமங்கலத்தில் திமுக சார்பில் எப்படி களப்பணி செய்தோம் என்று வந்து பார்த்திருந்தால்தான் தெரியும் என்றார் அழகிரி.
திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அழகிரியிடம் கேட்டதற்கு, புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்த வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறியவர்களையும், துரோகம் செய்தவர்களையும், கட்சியில் மீண்டும் சேர்த்து பொறுப்பு கொடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்போதுதான் திமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று பதிலளித்தார்.