சுடச்சுட

  

  பண மதிப்பிழப்பை ஈடு செய்யும் திட்டங்கள் எதுவும் இல்லை: பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் பேச்சு

  By DIN  |   Published on : 04th February 2017 12:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pc

  சென்னை: பண மதிப்பிழப்பை ஈடு செய்யும் திட்டங்கள் எதுவும் மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
  மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த நிகழ்ச்சி சென்னை லயோலா வணிக மேலாண்மை கல்வி மையம் ("லிபா') சார்பில் நடைபெற்றது.  இதில், ப.சிதம்பரம் பேசியது:
  பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட குறுகிய கால வேதனைகள் 2018-19-ஆம் நிதியாண்டு வரை தொடரும். ஓர் அரசு என்பது எந்தச் சூழ்நிலையிலும் அறநெறியில் விசுவாசமாக இருக்க வேண்டும். ஏழைகளின் மீது பரிவு காட்டுவதே ஜனநாயக அரசுக்கு இலக்கணமாகும்.

  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுகட்டும் வகையிலான எந்த ஒரு திட்டங்களோ, அறிவிப்புகளோ மத்திய நிதி அறிக்கையில் இடம்பெறவில்லை.

  மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்  தின ஊதியம் பெறும் தொழிலாளர்கள் சுமார் 30 கோடி பேர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருள்கள் உள்பட எல்லா பொருள்களின் விலையும் உயர்ந்து விட்டது.

  நாட்டின் முதலீடு, உற்பத்தி ஆகிய இரு முக்கியக் காரணிகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் நுகர்வும், முதலீட்டாளர்களின் முதலீடும் குறைந்துள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. இதனால் அடுத்து வரும் நாள்களில் நாட்டின் உற்பத்தி விகிதம் சரிவடையும் என தனியார் நிறுவனங்கள், பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
   வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வருவதைக் காட்டிலும் இங்கிருந்து வெளியே செல்லும் முதலீடு அதிகரித்துள்ளது. அதைச் சரிப்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்படவில்லை.

  நிதிநிலை அறிக்கையில் நாட்டின் தேவை, முதலீடு ஆகியவற்றுக்கு மறைமுக வரியைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் நேரடி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பலன் இருக்காது.
    நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த அரசு முதலீடு, தனியார் முதலீடு, ஏற்றுமதி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், இது குறித்து எதுவும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தொழில் முனைவோரின் ஊக்கத்தை இழக்கச் செய்யும் வகையில் இருப்பதால் நாட்டின் தொழில் வளர்ச்சி விகிதம் 6.5 அளவிலேயே இருக்கும். இதே அளவிலான வளர்ச்சியே 2018-19-ஆம் நிதியாண்டு வரை தொடரும்.

  முதலீட்டைப் பொருத்தவரை நேர்மறையான வளர்ச்சி இல்லை. இதனால் 2014-15-ஆம் நிதியாண்டில் 4.9 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், நிகழ் நிதியாண்டில் -0.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக குறைப்பது மத்திய அரசின் கடமை ஆகும். மத்திய-மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை 6 சதவீதம் என்றளவில் இருக்க வேண்டும்.

   மத்திய அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் செலவினங்களுக்காக ரூ.75,000 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிப்பது போதுமானதல்ல. இதனால் சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்த தடையாக இருக்கும். சீனா, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்க முடிவு செய்திருக்கும் நிலையில் பாதுகாப்பு துறைக்கு ரூ.77,000 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

   கடந்த ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு ஏராளமான கடனுதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது வறட்சி ஏற்பட்ட மாநிலங்களில் முறையான நிதியளிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படாததால் விவசாயிகளின் இறப்பு அதிகரித்திருக்கிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai