
ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது குறித்து தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வியாழக்கிழமை விசாரணை செய்தனர்.
இது குறித்த விவரம்:
ஐ.எஸ்.பயங்கரவாத இயக்க வளர்ச்சிக்கு ரூ.65 ஆயிரம் நன்கொடை அளித்ததாக கடந்த வாரம் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த முகம்மது இக்பாலை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜமீல் முகம்மது அளித்த தகவலின் அடிப்படையில், இக்பால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இக்பால்,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு முதல் கட்ட விசாரணைக்குப் பின்னர்,அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விசாரணையில், சென்னையைச் சேர்ந்த மேலும் சிலர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நன்கொடை வழங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் போலீஸார் இக்பாலை மீண்டும் தங்களது காவலில் எடுத்து, அவரை சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனர். அவரிடம் கடந்த 3 நாள்களாக ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு மண்ணடி, பர்மா பஜார் பகுதியைச் சேர்ந்த சிலர் ஹவாலா பணத்தை நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீஸார் புதன்கிழமை விசாரணை செய்தனர்.
விசாரணை: இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பாக என்.ஐ.ஏ. அஜித்சிங் சகாரியா தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். ஹவாலா பணம் திரட்டப்பட்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு எப்படி வழங்கப்பட்டது என என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இக்பால் போன்று வேறு யாரேனும் ஹவாலா பணத்தை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு வழங்கி உள்ளார்களா என்ற கோணத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.