Enable Javscript for better performance
நாய்களையும் விட்டு வைக்காத பீட்டா அழியும் நிலையில் நாட்டு நாய்கள் இனம்!- Dinamani

சுடச்சுட

  

  நாய்களையும் விட்டு வைக்காத பீட்டா அழியும் நிலையில் நாட்டு நாய்கள் இனம்!

  By எஸ்.சபேஷ்  |   Published on : 25th January 2017 02:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dog1

   

  தமிழகத்தில் காளைகள் போல், நாட்டு நாய்களுக்கும் எப்போதுமே தனி சிறப்பிடம் உண்டு. வரலாற்றில் பல இடங்களில் தமிழகத்து நாட்டு நாய்கள் வீரத்தை, விசுவாசத்தை காட்டியதாக விவரிக்கப்பட்டுள்ளது.
  இத்தகைய பெருமைவாய்ந்த நாட்டு நாய் இனம் தற்போது அழிவைச் சந்தித்து வருகிறது.
  இவைகளை காப்பாற்றி மீண்டும் நாட்டு நாய் இனங்கள் பெருக தமிழக அரசு கால்நடை அபிவிருத்தி, பராமரிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
  வெளிநாட்டு நாய் வகைகளை விட வீரம் நிறைந்தவை தமிழகத்து நாட்டு நாய் இனங்கள். வெளிநாட்டு நாய் இனங்களான ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், பக் போன்றவைகளுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே திறமையாகச் செயல்படும். ஆனால் தமிழகத்து நாட்டு நாய் இனங்களான சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் வகை நாய்கள் பிறப்பிலேயே திறமை படைத்தவை. பயிற்சி இல்லாமலேயே இவை திறமையாகச் செயல்படுவது பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  இவ்வளவு சிறப்புமிக்க தமிழக நாட்டு நாய் இனங்கள் தற்போது வேகமாக அழிந்து வருகின்றன. இதற்கு முதல் காரணம், இந்த வகை நாய்களை மீட்டு பாதுகாக்கவும் அழிவைத் தடுக்கவும் தமிழக அரசின் கால்நடைத் துறையின் சார்பில் நாய் வளர்ப்புப் பிரிவு சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி முன்பு செயல்பட்டு வந்தது. இப்பிரிவினர் தமிழக நாட்டு நாய் இனங்களை இனவிருத்தி செய்து அழியாமல் பாதுகாத்து வந்தனர். யார் வேண்டுமானாலும் இப்பிரிவு அலுவலகத்துக்குச் சென்று இவ்வகை நாய்களை வாங்கி வந்து வளர்க்கலாம். இதற்கு தமிழக அரசு அனுமதியும் அளித்து இருந்தது.
  கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி பீட்டா அமைப்பினர் சைதாபேட்டை நாய்கள் வளர்ப்புக் கூடத்தில், அவை கொடுமைப்படுத்தப்படுவதாகவும் இக்கூட்டத்தை இந்திய விலங்குகள் நல வாரியம் ஆய்வு செய்து அவர்களின் பரிந்துரை மூலம் இந்த நாய் வளர்ப்புக் கூடத்தை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
  இதனைத் தொடர்ந்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் ஆய்வுக்குப் பிறகான பரிந்துரையின் பேரில் 2016 டிசம்பர் 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் சைதாபேட்டை நாய்கள் வளர்ப்புப் பிரிவை மூட உத்தரவிட்டது. இதையடுத்து நாய் வளர்ப்புப் பிரிவு மூடப்பட்டதால், நாட்டு நாய் இனப்பெருக்கம் தடை செய்யப்பட்டு விட்டது.
  நாட்டு நாய் இனங்கள் என்றாலே அனைவருக்கும் தெரிந்தவை சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்றவைதான்.
  சிப்பிப்பாறை: சிப்பிப்பாறை (இட்ண்ல்ல்ண்ல்ஹழ்ஹண்) தென் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாய் இனமாகும். தற்காலத்தில் இது பெரியாறு ஏரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை முக்கியமாக காட்டுப்பன்றி, மான், முயல் ஆகியவற்றை வேட்டையாடவும், வீட்டுக் காவலுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  மதுரை அருகே உள்ள சிப்பிப்பாறையில் அரச குடும்பத்தினரால் இவ்வகை நாய்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. இந்த நாய் இனங்கள் திருநெல்வேலி, மதுரையை ஆண்ட மன்னர்களால் மதிப்புமிக்க மற்றும் கண்ணியமான இனமாக வளர்க்கப்பட்டு வந்தது.
  நம் முன்னோர்கள் வேட்டையாட பயன்படுத்தும் இனமான சிப்பிப்பாறை நாய்கள் வீட்டுக்கும் சிறந்த காவலனாக இருக்கும். முயலில் அதிவேகம் கொண்டதாகச் சொல்லப்படும் ஹேர் முயலை விட வேகமாக ஓடக் கூடியவை. மனிதர்களுடன் மிகவும் பாசத்துடன் பழகும் இந்த இன நாய்கள் முழுக்க முழுக்க மனிதர்களை நேசிக்கும்.
  கன்னி: கன்னி இன நாய்கள் கூச்ச சுபாவம் உடையவை. என்றாலும் அவை வீட்டையும், தன் எஜமானரையும் காக்கும். இவை அமைதியானவை. தொல்லை தரும் வகையில் குரைக்காதவை. கன்னி நாய்கள் மிகவும் விசுவாசமாக இருப்பவை. பயிற்சியளிக்க எளிதானவை. ஆனால் அவை எப்போதும் வேட்டையின்போது தனித்து இயங்க நினைப்பவை. இவை மிகவும் சுறுசுறுப்பானவையாகவும், வலுவான கால்களைக் கொண்டதாகவும் உள்ளதால் மான்களை வேட்டையாட பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை நாய்கள், உரிமையாளருக்கு மிகவும் உண்மையாக இருக்கும். சுயமாக சிந்திக்கக்கூடிய திறன் படைத்தவை. பழகுவதற்கு மிகவும் எளிதானது. கடந்த காலங்களில் பெண் வீட்டார் மணமகனுக்கு அளிக்கும் சீர் வரிசைகளில் கன்னி வகை நாய்களும் கண்டிப்பாக இடம்பெற்றிருந்தன.
  கோம்பை: இவ்வகை நாய் இனம் தற்போதும் தமிழகத்தில் காணப்படுகின்றன. இது வேட்டைநாய் வகையினைச் சார்ந்ததாகும். அதிக வீரம் கொண்ட நாயாகவும், கட்டளைகளுக்கு கீழ்படியும் தன்மை உள்ளதாகவும் அறியப்படுகிறது. இந்த வேட்டைநாய் இனத்தினை காவலுக்காகவும் வளர்க்கின்றனர். பண்ணைக் காவலன் என பெயர் கொண்ட கோம்பை நாய்கள், தனி ஒருவனாகக் காவல் காப்பதில் திறமைசாலிகள். கோம்பையை மீறி எந்த மிருகமும் அருகில் நெருங்க முடியாது. காட்டு எருமையைக்கூட வேட்டையாடும் திறமை படைத்தவை கோம்பை நாய்கள்.
  ராஜபாளையம்: இந்திய வேட்டை நாய் வகையைச் சார்ந்தவை ராஜபாளையம் நாய்களாகும். முந்தைய நாள்களில் இந்த வகை நாய், தென்னிந்தியாவில் வசதி படைத்தோரிடமும், ஆளும் வர்க்கத்தினரிடமுமே இருந்து வந்தன.
  குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் மட்டுமே இவை அதிகம் காணப்பட்டதால் இந்நாய்களுக்கு இப்பெயர் வந்தது. உரிமையாளருக்கு மிகவும் விசுவாசமானவை ராஜபாளையம் நாய்கள். உரிமையாளரைத் தவிர வேறு யாரையும் தன்னை தொட விடாது. 75 செ.மீ. வரை வளரக் கூடியவை. இது பிற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டிருப்பினும் பிற குணங்களில் அனைத்துடனும் ஒத்துப் போகிறது.
  இந்த வகை நாட்டு நாய்கள் அனைத்துக்குமே பிரத்யேக உணவு வகைகள் தேவையில்லை. இவை, மனிதர்களாகிய நாம் சாப்பிடும் உணவுகளையே உண்பவை.
  இவைகளை எளிதில் நோய் அணுகாது. முடி உதிரும் தன்மை இல்லாதவை. நாட்டு நாய்களுக்கென தனி உணவை நாம் விலைகொடுத்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.
  இவ்வளவு தனித்தன்மை, திறமை, விசுவாசம் கொண்ட இந்த நாட்டு நாய் இனங்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை பெற்று மீண்டும் நாய் வளர்ப்புப் பிரிவை திறந்து இந்த நாட்டு நாய்
  களி ன் இனத்தை அழியாமல் தமிழக அரசு கால்நடைத் துறை பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள், பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

  * நாட்டு நாய் இனங்களான சிப்பிப்பாறை,கன்னி, கோம்பை, ராஜபாளையம் வகை நாய்கள் பிறப்பிலேயே திறமை படைத்தவை. பயிற்சி இல்லாமலேயே இவை திறமையாக செயல்படுவது பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. *

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai