தினகரனுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் வலியுறுத்தல்

டிடிவி தினகரனுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தினகரனுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் வலியுறுத்தல்


புது தில்லி: டிடிவி தினகரனுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புது தில்லி சென்றுள்ள பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.

அதன்பிறகு தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து அதற்குரிய விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வந்த செய்திகளையும், அதைத் தொடர்ந்து சுகேஷ், டிடிவி தினகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், அதிமுக பொதுச் செயலர் இடம் காலியாகத்தான் இருக்கிறது. யார் பொதுச் செயலர் என்று அங்கு குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், கழகத்தின் பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் ஏற்பட்டதால் அந்த காலி இடத்தை யார் நிரப்ப வேண்டும் என்று சட்ட விதி குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது, கழகத்தின் அவைத் தலைவரும், பொருளாளரும் தான் தலைவராகப் பணியாற்றுவார்கள் என்று சட்ட விதி சொல்கிறது.

ஆனால், தேர்தல் மூலமாகத்தான் பொதுச் செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கழகத்தின் சட்ட விதி சொல்லப்பட்டிருக்கும் போது, தன்னிச்சையாகவே பதவியேற்றுக் கொண்ட சசிகலா பொதுச் செயலராக பணியாற்ற முடியாது.

கழகத்தின் பொருளாளராக இருக்கும் நான் தான் தலைவராக பணியாற்ற முடியும் என்று குறிப்பிட்டிருந்தும், சசிகலா மூலமாக கழகத்தின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டார். உடனே வங்கிகளுக்கு கடிதம் மூலமாக கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும், கழக சட்ட விதிப்படி தேர்ந்தெடுக்கப்படாத திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக செயல்படக் கூடாது என்று தெரிவித்திருந்தோம். ஆனால், அதனை வங்கிகள் கருத்தில் எடுத்துக் கொள்ளாததால், திண்டுக்கல் சீனிவாசன் பல கோடி ரூபாய் பணத்தை எடுத்திருப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தொண்டர்களின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்க வேண்டும். மக்களின் ஆதரவு எங்கள் அணிக்குத்தான் உள்ளது. 122 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே சசிகலா அணிக்கு உள்ளது.

சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் போயஸ் கார்டன் இல்லம் உள்ளது. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் அரசு உள்ளது. சசிகலாவின் குடும்பத்துக்குள் எடப்பாடி பழனிசாமி அணியினர் குடிபுகுந்துள்ளனர். இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை யாரால் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு நன்றாகவேத் தெரியும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com