Enable Javscript for better performance
வீராணம் ஏரியை வந்தடைந்த கீழணை தண்ணீர்- Dinamani

சுடச்சுட

    

    கீழணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது.
    வீராணம் ஏரி மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், 1996-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னைக்கு இங்கிருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக பருவ மழை போதிய அளவில் பெய்யாதது, காவிரியில் கர்நாடக அரசு போதிய தண்ணீர் திறக்காதது போன்ற காரணங்களால் வீராணம் ஏரி வறண்டு, சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது. 
    மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருந்தும் காலதாமதமாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 18-ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்குப் பிறகு வீராணம் ஏரிக்கு வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. கீழணையில் சுமார் 7.5 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டு, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு மட்டும் தண்ணீர் அனுப்பப்படுகிறது. 
    வடவாற்றில் தாமதமாக திறக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஏற்கெனவே, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி விதைவிட்ட விவசாயிகள் மட்டுமே தற்போது வருகிற தண்ணீரை நம்பி நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
    வடவாறு வழியாக வரும் தண்ணீரை கரை ஓரத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்த முடியாதபடி பாசன மதகுகள் அனைத்தும் பொதுப்பணித் துறை அலுவலர்களால் இரவு, பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. வீராணம் ஏரியில் 32 அடிக்கு தண்ணீர் தேக்கிய பிறகே பாசனத்துக்கு தண்ணீரை பயன்படுத்தும் சூழல் ஏற்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai