Enable Javscript for better performance
சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி- Dinamani

சுடச்சுட

  

  சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

  By DIN  |   Published on : 24th October 2017 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  edapadi

  சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள்.

  சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
  சிவகாசியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:
  உழைப்பாளிகள் அதிகம் உள்ள "குட்டி ஜப்பான்' என்று அழைக்கப்படும் சிவகாசியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், திரைப்படத்தில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் தொழிலாளர்கள் முன்னேற்றத்தை பெரிதும் விரும்பியவர் எம்.ஜி.ஆர்.
  தொழிலாளர்கள் நகரம் சிவகாசி என்றால், வியாபார நகரம் விருதுநகர். விருதுநகர் மாவட்டம் புராதனப் பெருமையும், ஆன்மிகமும், அரசியல் வரலாறும் கொண்டது. ரமண மகரிஷி, பெருந்தலைவர் காமராஜர், சங்கரலிங்கனார் அவதரித்தது இம்மாவட்டத்தில்தான்.
  அண்மைக் காலமாக சிலர் தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலம் ஆளும் கட்சியை குறை கூறி, தங்களை செல்வாக்குள்ளவராகக் காட்டி கொள்ள முயற்சிக்கின்றனர். அதிமுக ஆட்சியை கலைத்து விடுவோம், வீட்டுக்கு அனுப்பிவிடுவோம் என சிலர் புலம்பி வருகின்றனர். அவர்களது கனவு எந்த நாளும் பலிக்காது. மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து முடிப்பவர்கள் நாங்கள். எனவே எங்கள் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது .
  சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு பரிசீலிக்கும். சிவகாசி நகரைச் சுற்றி 33.48 கி.மீட்டருக்கு சுற்றுச்சாலை அமைக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கல், ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். அருப்புக்கோட்டை நகராட்சிக்கு புறவழிச்சாலை ஏற்படுத்தப்படும். வடபட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்படும். அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் நகராட்சிப் பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வத்திராயிருப்பை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்கப்படும் என்றார் முதல்வர்.
  விழாவில், பல்வேறு துறைகள் சார்பில் 21,733 பயனாளிகளுக்கு ரூ. 54.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, முதல்வர் வழங்கினார். தொடர்ந்து, பொதுப்பணித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் ரூ. 48. 81 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களுக்கான கல்வெட்டுகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
  மேலும், பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை சார்பில் ரூ. 13.38 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 6 திட்டப் பணிகளுக்கும் அவர் டிக்கல் நாட்டினார்.
  முன்னதாக, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பால் வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மக்களவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
  இந்த நிகழ்ச்சியில், ராஜபாளையத்தைச் சேர்ந்த பார்வதி, கனகலெட்சுமி என்ற இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை தடுத்துவிட்டனர்.


  முதல்வர் கூறிய குட்டிக் கதை

  ஒரு நாள் ஆற்றில் நண்பர்கள் பலர் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், அதில் சிலர் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது, கரையோரத்தில் இருந்த பொருள்களும் அடித்துச் செல்லப்பட்டன. சிலர் ஆற்றில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றினர். அதில், பேராசை பிடித்த ஒருவன் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்காமல், ஆற்றில் மிதந்து செல்லும் பொருள்களை மீட்க முயன்றான். அது தவறு என நண்பர்கள் அறிவுறுத்தினர். ஆனாலும், அவன் கேட்கவில்லை.
  அச்சமயத்தில் ஒரு மூட்டை மிதந்து வருவதைக் கண்டு ஆற்றில் குதித்து மூட்டையை எடுத்து வர முயற்சித்தான். ஆனால், மூட்டையை கொண்டு வர முடியாமல் நடு ஆற்றில் போராடிக் கொண்டிருந்தான். அதை கண்ட நண்பர்கள், அவனை கரைக்கு வருமாறு அழைத்தனர். அப்போது அவன், நான் எப்போதோ மூட்டையை விட்டுவிட்டேன். இப்ப அதுதான் என்னை விடமாட்டேன் என்கிறது. ஏனென்றால், அது கம்பிளி மூட்டை இல்லை, கரடிக் குட்டி என்றான்.
  இப்படித்தான் பலர் ஆசைப்பட்டு தவறான இடத்துக்குச் சென்றுவிட்டு, அதை விட்டுவிட்டு வர முயன்றாலும் வர முடியவில்லை. தவறானவர்கள் அவர்களை பிடித்துக் கொண்டு விட மறுக்கிறார்கள் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
  எதிர்க்கட்சித் தலைவர் தற்போது புதிதாக ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அரசியல்ரீதியாக அதிமுகவை எதிர்க்க முடியாமல் டெங்கு காய்ச்சலை பிடித்துக் கொண்டுள்ளார். எப்படி கரடியை பிடித்தார்களோ, அதைபோல், இவர் டெங்கு காய்ச்சலை பிடித்துக்கொண்டு அரசியல் செய்யப் பார்க்கிறார்.
  நீங்கள் எந்த சூழ்ச்சி செய்தாலும், எத்தகைய தில்லுமுல்லு செய்தாலும், அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என்றார் முதல்வர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai