அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நகைக்கடைகளில் புதன்கிழமை பெண்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் கடந்த ஆண்டு அட்சய திருதியை நகை விற்பனையை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி, அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக அட்சய திருதியை அன்று அதிக எண்ணிக்கையிலானோர் நகைகளை வாங்குகின்றனர்.
காலை 6 மணி முதலே...: நிகழாண்டு புதன்கிழமை அட்சய திருதியை தினத்தன்று நகைக்கடைகளுக்கு மக்கள் அதிகாலையிலேயே படையெடுக்கத் தொடங்கினர். சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், வடபழனி, குரோம்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காலை 6 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போதே மக்களும் நகை வாங்குவதற்காக கடைகளுக்குச் சென்றனர். பல நகைக்கடைகளின் உள்ளே இடம் இல்லாததால், மக்கள் வெளியே அமர வைக்கப்பட்டனர். உள்ளே சென்றவர்கள் நகை வாங்கிவிட்டு வெளியே வந்ததும், காத்திருந்தோர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நகைக்கடைகளில் உள்ள வாகன நிறுத்தமும் நிரம்பி வழிந்தது. இதனால் வாகனங்களை நிறுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
முன்பதிவு முறை: அட்சய திருதியை நாளுக்கென்று சிறப்பு முன்பதிவுத் திட்டங்கள் பல்வேறு நகைக்கடைகளில் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு செய்து ரசீது வைத்திருந்தோர், ரசீதைக் கொடுத்து நகைகளை வாங்கிச் சென்றனர். முன்பதிவு செய்யாதோர் காத்திருந்து நகைகளைத் தேர்ந்தெடுத்தனர்.
சிறிய நகைகள்: எடை குறைவான பேன்சி நகைகளையே அதிகமானோர் வாங்கிச் சென்றதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். அட்சய திருதியை நாளன்று சிறிதளவு தங்கத்தையாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஐதீகத்தால், அதிகமானோர் சிறிய கம்மல், மோதிரம், தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றையே வாங்கிச் சென்றனர். ஆண்களைக் காட்டிலும் பெண்கள், குழந்தைகளே அதிக அளவில் நகைக் கடைகளில் காணப்பட்டனர்.
தங்க நாணயங்கள்: நகைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்க நாயணங்களின் விற்பனையும் அமோகமாக இருந்தது. சில நகைக்கடைகளில் தங்க நாணய விற்பனைக்கென்று தனி கவுன்ட்டர்கள் செயல்பட்டன. மக்கள் வரிசையில் நின்று தங்க நாணயங்களை வாங்கிச் சென்றனர். சில ஹிந்துக் கோயில்களிலும் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டன.
கண்காணிப்பு தீவிரம்: அதிக எண்ணிக்கையிலானோர் நகைக் கடைக்கு வந்ததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் காவல் துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்தனர்.புதன்கிழமை நள்ளிரவு வரை தங்க விற்பனை நீடித்தது. வியாழக்கிழமையும் இதேபோன்று விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனை அதிகரிப்பு: கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தங்க விற்பனை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நகை விற்பனையாளர்கள் கூறியது: கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் கூடுதலாக தங்க விற்பனை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமையும் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நடைபெறும். இரண்டு நாள்களில் தமிழகம் முழுவதும் 10,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகும் என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



