சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் தர முடியாது என்று தமிழக அரசு மறுத்துள்ளது.
மாறாக, கிண்டி காந்தி மண்டபம் பகுதியில் இடம் ஒதுக்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குகள் இருப்பதால் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது என்றும் அரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளது.
இந்த தகவலை அறிந்த திமுக தொண்டர்கள் பல்வேறு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்த வழக்குரைஞர் துரைசாமி, தான் தொடர்ந்த வழக்குதான், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க தடையாக இருக்குமென்றால், நான் எனது வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக சட்டம் என்ன சொல்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்.
அதன்படி, அண்ணா நினைவிடம் அமைந்துள்ள பகுதி கடற்கரைப் பகுதியாக அல்லாமல் நினைவிடப் பகுதியாகவே உள்ளது. சென்னை மெரினா கடற்கரை தொடர்பான சட்டம் வருவதற்கு முன்பே அண்ணா நினைவிடம் அமைக்கப்பட்டுவிட்டது.
அதோடு, எம்ஜிஆர் சமாதிக்கு அருகே ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள பகுதிதான் கடற்கரைப் பகுதியே தவிர, அண்ணா நினைவிடப் பகுதி கடற்கரைப் பகுதியாக இல்லை. அது நினைவிடப் பகுதியாகவே உள்ளது. அதே சமயம், அது கூவம் நதிக்கரைப் பகுதியாகவும் அமைந்துள்ளது. எனவே, அண்ணா சமாதி அமைந்துள்ள பகுதியில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குவதில் சட்டம் எந்த வகையிலும் தடையாக இருக்காது என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதோடு, மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குவதற்கு, நான் தொடுத்த வழக்குதான் தடையாக இருக்கும் என்றால், மெரினாவில் ஜெ நினைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெறத் தயார் என்றும் வழக்குரைஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.