அனைவரும் மழைநீர் சேமிப்பை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாம் அனைவரும் மழைநீர் சேமிப்பை கட்டாயம் கடைப்பிடிப்பதன் மூலம் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து,
அனைவரும் மழைநீர் சேமிப்பை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Published on
Updated on
2 min read


நாம் அனைவரும் மழைநீர் சேமிப்பை கட்டாயம் கடைப்பிடிப்பதன் மூலம் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து, நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி சென்னை, தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவை மற்றும் நீர் மேலாண்மை' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது:
உணவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அடிப்படை நீர் பாதுகாப்பு. நாட்டில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, பிகார், கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் தண்ணீர் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. ஒருபுறம் வெள்ளப்பெருக்கு, மற்றொருபுறம் தண்ணீர் பற்றாக்குறை. இந்நிலையில், நீர் மேலாண்மை பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
மழைநீர் சேமிப்பு: ஒவ்வொரு துளி நீரையும் சேமித்து நாம் பயிர் செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு நாம் அனைவரும் மழைநீர் சேமிப்பை உறுதியாகக் கடைப்பிடித்து சேமிக்க வேண்டும். கடல் நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் நாம் கவனம் செலுத்துவதன் மூலம் கடலோரப் பகுதிகளின் செழிப்புக்கு உதவிகரமாக இருக்கும்.
நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் சொட்டுநீர் பாசன முறையை விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும். தேசிய கொள்கைகளை உருவாக்கும்போது, உலகளாவிய நிலவரத்தையும் அரசுக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீர் சேமிப்பின் மூலம் நீரை சேமித்து நமக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
வெள்ளப் பெருக்கின்போது உபரி நீரை சேமிக்கும் முறையைப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் விவசாயம், பிற தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.
நீர் மேலாண்மைக்கு பல வழிகள் உள்ளன. மறுசுழற்சி, நீர்ப்பாசனத்தில் புதிய நடைமுறை, கடலில் வீணாகக் கலக்கும் நீரை சேமிக்கும் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
சர்க்கரை, காகிதம், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தண்ணீரை மறுசுழற்சி செய்வதன் மூலம் மின்உற்பத்தி, விவசாயப் பயன்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்த முடியும். பல இடங்களில் கால்வாய்களை அமைக்க நிலம் எடுப்பதில் எதிர்ப்பு இருப்பதால், சாலைகளை அமைக்கும்போதே அவற்றையொட்டி குழாய்களைப் பதித்து நீரை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுச் செல்லலாம் என்றார் அமைச்சர் நிதின் கட்கரி.
கர்நாடக அமைச்சர் என்.எச்.சிவசங்கர ரெட்டி: இந்நிகழ்ச்சியில், கர்நாடக மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சர் என்.எச்.சிவசங்கர ரெட்டி பேசியது:
சிறு, குறு விவசாயிகள் உப்புத் தன்மையை சமாளிக்கக் கூடிய பயிர்களை பயிரிட வேண்டும். எண்ணெய் வித்துப் பயிர்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தி இதன் மூலம் அதிகரிக்கும். உப்பு நீரில் விளையக்கூடிய அரிசி ரகங்களைப் பயிரிடுவதும் நல்ல முயற்சியாக அமையும்.
கர்நாடகத்தில் சிறு குளங்கள்: கர்நாடக மாநிலத்தில், கிருஷி பாக்யா திட்டத்தின் கீழ் வறட்சி மிகுந்த நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் மழைக் காலத்தில் தங்களுடைய நிலங்களில் சிறு குளங்களில் நீரைத் தேக்கி வைத்து நீர் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உருவாக்கப்பட்டு வறட்சி மிகுந்த காலங்களில் அவற்றின் மூலம் நீர்த் தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர். தேசிய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய நீர்க் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றார் அமைச்சர்.
கருத்தரங்கில் நபார்டு வங்கித் தலைவர் ஹர்ஷ் குமார் பன்வாலா, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் சுவாமிநாதன், தலைவர் மதுரா சுவாமிநாதன், நிர்வாக இயக்குநர் வை.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.