ஓயாமல் உழைத்த தொண்டன் இங்கே ஓய்வெடுப்பு

ஓயாமல் உழைத்த தொண்டன் இங்கே ஓய்வெடுப்பு
ஓயாமல் உழைத்த தொண்டன் இங்கே ஓய்வெடுப்பு
Published on
Updated on
1 min read


ஓயாமல் உழைத்த ஒரு தொண்டன் இங்கே  ஓய்வெடுத்துக் 
கொண்டிருக்கிறான்' 
என்று என் கல்லறையில் எழுதப்படும் எழுத்துகளுக்காக நான் 
தவம் இருக்கிறேன்.
திமுக தலைவர் கருணாநிதி.
இவ்வாறு தனது மனதில் தோன்றியவற்றை பொன்மொழிகளாக 
சின்ன சின்ன மலர்கள்' என்ற தலைப்பில் அவ்வப்போது கருணாநிதி எழுதினார். 
அவற்றில் மேலும் சில:

அனுபவம் ஒரு பள்ளிக்கூடம் - ஆனால் அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை.
அலைகள் ஓய்ந்த பின்னரே நீராட வேண்டுமெனக் காத்திருப்பவரும் - இடையூறுகள் இல்லாத போதுதான் பொது வாழ்வில் ஈடுபட வேண்டுமென நினைப்போரும் ஒரே வகையினர்தான்.
அதிகாரத்துக்கு வளையும் நீதியுடன்அதிகாரம் என்ற சொல்லின் முதல் எழுத்து இணைந்து அநீதி' ஆகிவிடுகிறது.
தவறு செய்தால் கடவுளிடம் மன்னிப்புக் கேள் என்கிறார்கள். மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் தவறுகளைச் செய்து கொண்டே இருந்தால் இறைவன் ஓர் ஏமாளி என்றுதானே நினைப்பு?
தேன்கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான்! இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்க்குப் பயன்படுவதில்லை!
வீரன், ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான் என்பதில் ஒரு திருத்தம்; வீரன் சாவதே இல்லை! கோழை வாழ்வதே இல்லை!
தென்னை மரத்தில் புல் பிடுங்க ஏறினேன்' என்றான், காவலரிடம் சிக்கிக் கொண்ட திருடன்!
தென்னை மரத்தில் ஏதப்பா புல்?' என்று கேட்டதும் - அதனால்தான் இறங்கிவிட்டேன்' என்றான் அவன்!
அந்தத் திருடனை நம்பினால் திருந்துமா சமுதாயம்?
எழுத்தாளனே! தாளில் எழுதும்போது உன் தலை குனிந்திருக்கலாம்; ஆனால் தன்மானம் குனியக் கூடாது! அப்போதுதான் எழுதுவதற்காகக் குனியும் உன் பேனா; கூனிக் கிடப்போரையும் நிமிர்ந்து எழுந்திடச் செய்யும்!
தங்கத்தால் நாக்கு செய்து மாட்டினாலும் நாயின் இயல்பு, குரைக்கத்தான் செய்யும்!
ஆசைகள் சிறகாகலாம்! அதற்காகக் கால்களை இழந்துவிட்டுப் பறந்தால்; பிறகு பூமிக்குத் திரும்ப முடியாது!
ஆச்சரியக் குறிகள், கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறிகள் ஆகிவிடும்! கேள்விக்குறிகள் நிமிர்ந்தால் ஆச்சரியக் குறிகளாகிவிடும்!
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வின் சித்தாந்தம்! தாவுகிற புத்தி மட்டும் இன்னும் சிலரை விட்டுப் போகாததிலிருந்து அந்தச் சித்தாந்தம் சரியென்றே தோன்றுகிறது.
பாரியின் தேர்க்கால் முறிந்ததால் மலைப் பாதையில் நிறுத்திவிட்டுப் போனான். அந்தத் தேர் மீது ஒரு முல்லைக் கொடி படர்ந்து, அவனைக் கடையெழு வள்ளல்களில் ஒருவனாக ஆக்கிவிட்டது.
நெஞ்சு பொறுக்குதில்லையே நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்றான் பாரதி! என் செய்வது; நெஞ்சே இருப்பதில்லையே நிலைகெட்ட மனிதருக்கு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.