கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Published on


திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போல, திமுக தலைவர் கருணாநிதியும் தமிழக மக்களின் குரலை பிரதிபலித்தவர். மெரீனாவில் இடம் ஒதுக்கப்பட அந்த குரலுக்கும் தகுதியுள்ளது. இந்தத் துயர நேரத்தில், தமிழகத்தின் இன்றைய தலைவர்கள் பெருந்தன்மையுடன் இந்த விவகாரத்தில் நடந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரையில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்திருப்பது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் எந்த வகையிலும் அரசியல் செய்யக் கூடாது. மெரீனா கடற்கரையில் அவருடைய உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்: கருணாநிதி விரும்பியது போல, அண்ணா நினைவிடத்துக்கு அருகிலேயே அடக்கம் செய்து நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் இடம் தர தமிழக அரசு மறுத்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. அவர் விருப்பப்படி, அண்ணா நினைவிடம் அருகில் இடம் தர வேண்டும். 
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக அரசியலில் முத்திரை பதித்த கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய, சென்னை மெரீனா கடற்கரையில் இடம் ஒதுக்கித் தருவதே பொருத்தமானதாகும். 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: மெரீனாவில் இடம் ஒதுக்கி அமைதியான முறையில் அவருடைய நல்லடக்கம் நடைபெற தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும். 
நடிகர் ரஜினிகாந்த்: மதிப்பிற்குரிய அமரர் கருணாநிதியை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டும். அதுதான் நாம் அந்த மாமனிதருக்குக் கொடுக்கும் தகுந்த மரியாதை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்