திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்னர்.
ராகுல் காந்தி: தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் கருணாநிதி. இந்தியா தனது சிறந்த மகனை' இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
அமித் ஷா: கருணாநிதியின் மறைவு குறித்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் (1975-ஆம் ஆண்டு) கருணாநிதியின் போராட்டத்தை யாராலும் மறந்து விட முடியாது.
எல்.கே.அத்வானி: மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி, உயர்வான குறிக்கோள்களை கொண்டிருந்தவர். அரசியலில் சிறந்து விளங்கிய அவர், தமிழுக்காகவும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
கேரள ஆளுநர் சதாசிவம்: கருணாநிதி முதல்வராக பதவி வகித்தபோது கொண்டுவந்த ஒவ்வொரு திட்டமும், பிற்படுத்தப்பட்டோர், சமூகத்தில் நலிந்த பிரிவினரை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தை பிரதிபலித்தது. அவரது இழப்புக்கு ஆறுதல் கூறுவதை வெறும் வார்த்தைகளால் அடக்கிவிட முடியாது என்று சதாசிவம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி மறைவுக்கு முன்னாள் பிரதமர்கள் ஹெச்.டி.தேவெ கௌடா, மன்மோகன் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மேகாலய முதல்வர் கான்ராட் கே. சங்மா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.