திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெவித்துள்ளனர்.
திருநாவுக்கரசர்(காங்கிரஸ்): அரசியல் இமயம் சரிந்தது, ஓய்வறியா உதய சூரியன் ஓய்வெடுக்கச் சென்றது. தமிழன்னை தன் தலைமகனை, முத்தமிழ் அறிஞரை, செம்மொழிக் காவலரை இழந்து கண்ணீர் சிந்துகிறாள். தமிழினமும், தமிழ் மொழியும் உள்ளவரை கருணாநிதியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
பொன். ராதாகிருஷ்ணன் (மத்திய அமைச்சர்): அரசியல் நிலையை தனது புத்திக் கூர்மையான செயல்பாட்டின் மூலமாக எத்திசைக்கும் இழுத்துச் செல்லும் வல்லமை படைத்தவருமான திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
அவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு எவராலும் நிரப்ப இயலாது.
தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக): தமிழக அரசியலில் ஒரு வரலாறு முடிந்து இருக்கிறது. இன்னொரு அரசியல் வரலாறு அவரைப் போன்று இன்னொருவர் எழுத முடியாது என்பதை அவரே எழுதிச் சென்றிருக்கிறார். கருணாநிதியின் மறைவு தமிழக அரசியலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கே பேரிழப்பு.
இரா.முத்தரசன்(இ.கம்யூ): வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி கண்ட கருணாநிதி, தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நீங்காமல் நிலைத்து நிற்பார்.
கே.பாலகிருஷ்ணன்(மா.கம்யூ): பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவர் சிலை என கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏராளம். மாநில உரிமைகளுக்கு ராஜமன்னார் குழு அமைத்து அந்தக் குழுவின் முடிவுகளை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றியவர். அவரது மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பாகும்.
விஜயகாந்த் (தேமுதிக): இந்த யுகத்தின் ஈடு இணையில்லா தலைவர் கருணாநிதி மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வைகோ(மதிமுக): கோடான கோடி தமிழர்களின் உள்ளங்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு கருணாநிதி உயிரிழந்துவிட்டார்.
ராமதாஸ்(பாமக): எனது அரசியல் வாழ்க்கையில் நான் நிலைகுலைந்து போன தருணங்களில் நண்பர் கருணாநிதியின் மறைவு செய்தியை அறிந்த நேரமும் ஒன்று. அவரது ஆட்சியில்தான் அதிகாரத்தின் உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமருவதற்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. கலைஞரின் மறைவு திமுகவுக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
இராம கோபாலன்(இந்து முன்னணி): திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.
நடிகர் ரஜினிகாந்த்: என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்'.
கவிஞர் வைரமுத்து: கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர். ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. மகாகவி தாகூர் மரித்த நாளில் அவர் மறைந்திருக்கிறார். ஓ! கலைஞரின் மரணம்கூட கம்பீரமானது. என் ஒவ்வோர் எழுத்தையும் வாசித்து நேசித்து உரையாடுவார். அவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கி தொழுகிறேன்.
கி.வீரமணி(திராவிடர் கழகம்): எந்தக் கொள்கைக்காக, இலட்சியத்திற்காக, திராவிட இயக்கத்துக்காக உழைத்தாரோ அதை குன்றாது மேலும் ஒளிவீசித் திகழ்ந்திட உறுதிமொழி எடுப்பதே நாம் அவருக்குக் காட்டும் மிகப்பெரிய மரியாதையாகும்.
பழ.நெடுமாறன்(தமிழர் தேசிய முன்னணி): கருணாநிதி மறைவு தமிழக பொதுவாழ்வுக்கு பேரிழப்பாகும். திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமணி (பாமக): தமிழக அரசியலில் எத்தனையோ புயல்கள் வீசிய போதிலும், அவற்றுக்கெல்லாம் அசையாமல் 50 ஆண்டுகள் தலைவராக களப்பணி ஆற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
ஜி.கே.வாசன்(தாமக): தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் அவர் ஆற்றிய பங்கு மிகச்சிறப்பானது. கருணாநிதியின் மறைவுக்கு கனத்த இதயத்தோடு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமாவளவன்(விசிக): சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக பெரியார் பெயரில் சமத்துவபுரம் அமைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது மறைவுக்கு கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்.
டிடிவி தினகரன்(அமமுக): தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவருமான கருணாநிதி மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
சரத்குமார்(சமக): மிகக் குறுகிய காலத்தில் கட்சியில் தனது திறமையை நிரூபித்து அண்ணாதுரையின் நம்பிக்கையைப் பெற்று, அவருக்குப் பின்னர் திமுக என்ற மிகப் பெரிய கட்சியின் தலைவராக தன்னை உயர்த்திக் கொண்டவர். அவரது அரும்பெரும் சாதனைகளை மனதில் நிறுத்தி தமிழைக் காப்போம்.
தி.வேல்முருகன்(தவாக): இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவருமான கருணாநிதியின் மறைவு, உலகத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
எம்.ஹெச்.ஜவாஹிருல்லா(மனிதநேய மக்கள் கட்சி): சமூகநீதி என்றால் இடஒதுக்கீடு என்ற அளவில் முடிந்துபோய் விடக்கூடியது அல்ல; எல்லா நிலையிலும் எவரும் சமத்துவம் என்ற நிலையை எய்துவதே' என்ற புரிதலை கருணாநிதி கொண்டிருந்தார்.
கே.எம்.காதர் மொகிதீன்(இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்): காயிதே மில்லத் பெயரால் கல்லூரிகள், காயிதே மில்லத் மணிபண்டம் அடிக்கல் நாட்டு விழா, மீலாது விழாவுக்கு அரசு விடுமுறை என பல சமூக நலத்திட்டங்களை சிறுபான்மை சமுதாயங்களுக்கென்றே வகுத்து நடைமுறைப்படுத்திய மாபெரும் மனிதநேய தலைவர் கருணாநிதி.
தென்னிந்திய நடிகர் சங்கம்: ஒரு எழுத்தாளராக சினிமாவில் அவரைப்போல் சாதித்தவர் எவரும் இல்லை. சினிமாவில் அவரது வசனங்கள் ஹீரோக்களுக்கு இணையாக பேசப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொழிலதிபர் வேணு சீனிவாசன்: ஒரு தேசிய தலைவராக உலா வந்த ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டோம். அவர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒரு கருவியாக இருந்து வந்தார். அடிமட்டத்தில் இருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட்டவரான அவரை தமிழகமும், இந்த நாடும் நிரந்தரமாக இழந்து விட்டது.
இந்திய தேசிய லீக் தேசியப் பொதுச் செயலாளர் எம்ஜிகே நிஜாமுதீன், தமிழக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் க.ஜான்மோசஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், சிஐடியூ மாநிலக் குழுவின் தலைவர் அ.சவுந்தரராஜன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இந்து பாலா, பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுஉள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.