திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.2 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
அசாதாரண சூழல்: அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து சென்னையில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அதேசமயம், கருணாநிதி மறைவால், சென்னையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதையடுத்து சென்னையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை உடனடியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி விஜயகுமார், உளவுத் துறை ஐஜி கே.என்.சத்தியமூர்த்தி, பாதுகாப்புப் பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு: இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழக்கம்போல் கிடைப்பதற்கும், அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக அரசு பேருந்து பணிமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வங்கிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனையகங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல், பதற்றமான இடங்களில் கூடுதலாக பாதுகாப்பு வழங்கும்படியும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் முழு அளவில் காவலர் பணியில் இருக்கும்படியும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
கடும் எச்சரிக்கை: அரசு சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பாதுகாப்பு: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆணையர்கள் எம்.சி.சாரங்கன், எச்.எம்.ஜெயராம், ஏ.அருண், இணை ஆணையர்கள் பிரேம்ஆனந்த் சின்ஹா, டி.எஸ்.அன்பு, மகேஷ்வரி, நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் இடமான ராஜாஜி அரங்கு, இறுதி ஊர்வலம் நடைபெறும் பகுதி, பதற்றம் மிக்க இடங்கள் ஆகியவற்றில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை விட, கூடுதலாக பாதுகாப்பு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
துணை ராணுவத்தினர் வருகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் ஆயுதப் படை போலீஸார் உள்பட சுமார் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக 10 ஆயிரம் ஆயுதப் படை காவலர்களும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 12 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 12 கம்பெனிகளைச் சேர்ந்த 1,200 காவலர்கள் ராஜாஜி அரங்கு, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, வாலாஜா சாலை ஆகிய இடங்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
20 ஐபிஎஸ் அதிகாரிகள்: பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், செவ்வாய்க்கிழமை மாலை முதல் ராஜாஜி அரங்கு, கோபாலபுரம், சிஐடி காலனி, கிரீன்வேஸ் சாலை, அண்ணா சாலை ஆகியப் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1.2 லட்சம் போலீஸார்: இதேபோல், மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், அதிவிரைவு படையினர், 15 ஆயிரம் ஆயுதப் படையினர் என சுமார் 1.2 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பேருந்துகள் நிறுத்தம்: பாதுகாப்பு கருதி அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். பேருந்து நிலையங்களில் காத்திருந்த பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்து வீடுகளுக்கு திரும்பினர்.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்புபல மடங்கு அதிகரிக்கப்பட்டது.