மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய, அவரது விருப்பப்படிமெரீனா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகே இடம் ஒதுக்கக் கோரி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து வலியுறுத்தியதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என்பதே திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர் கருணாநிதியின் விருப்பமும் ஆகும். எனவே அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக சார்பில், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நானும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். முதலில் பார்ப்பதாகக் கூறிய அவர்கள், முறையாகக் கேட்க வேண்டும் என்றனர்.
பின்னர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நானும், திமுக எம்.எல்.ஏக்கள் பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் சந்தித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்ட வேண்டுகோள் மனுவை கொடுத்துள்ளோம். அந்தக் கடிதத்தை வாங்கிக் கொண்ட பின், இடம் ஒதுக்குவது குறித்துப் பார்ப்பதாகக் கூறினர் என்றார் துரைமுருகன்.