சென்னை: தமிழக கோயில்களில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிலைக் கடத்தல் வழக்குகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்த அரசாணையை எதிர்த்து வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயரதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது ஏன்? என்று தமிழக அரசும், டிஜிபியும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.
மேலும், சிலைக் கடத்தல் வழக்குகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிப்பார் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரே நாளில் இந்த முடிவை அரசு எடுக்கக் காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர்.
ஒரு நிமிடம் கூட அமலில் இருப்பதற்கு தகுதி இல்லாத அரசாணை இது என்றும், இது அமலில் இருக்க அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.