திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ. 3-ஆவது நாளாக தொடர் விசாரணை: சுங்கத் துறையினர் 6 பேர் சஸ்பெண்ட்
திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து 3-ஆவது நாளாக தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சுங்கத் துறை அதிகாரிகள் 6 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர், கடத்தல் பேர்வழிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு தங்கம், மின்னணு சாதனப் பொருட்கள், மது வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வெளிநாடுகளிலிருந்து கடத்தி வர உதவுவதாகவும், அதே நேரம் பயணிகளிடம் சோதனை என்ற பெயரில் மிகவும் கெடுபிடி செய்வதாகவும், அவர்களை மோசமாக நடத்தி, வரி என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்துவதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் சோதனை செய்து, சந்தேகத்துக்கிடமான பயணிகள் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள், பணியாளர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளில் சுமார் 70 பேரை விமான நிலைய வளாக தனியறையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு, அவர்களில் 13 பேரை தவிர மற்றவர்களை விடுவித்தனர். அதேபோல சுங்கத் துறையினரில் 6 பேர் கடத்தலுக்கு உதவியதைக் கண்டறிந்தனர். இந்த சம்பவத்தில் சுங்கத் துறையினர் 6 பேர் மற்றும் வியாபாரிகள் போர்வையில், கடத்தல் தொழிலில் ஈடுபட்ட பயணிகள் 13 பேர் என மொத்தம் 19 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிந்து அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சிக்கியுள்ள சுங்கத் துறை (திருச்சி விமான நிலையம்) அதிகாரிகளான உதவி ஆணையர் எம். வெங்கடேசலு, கண்காணிப்பாளர்கள் கழுகாசலமூர்த்தி, எஸ். ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் எஸ். அனீஸ் பாத்திமா, பிரஷாந்த் கௌதம், சுங்கத் துறை ஊழியர் ஃப்ரெட்டி எட்வர்டு ஆகிய 6 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் சில பயணிகள் வீடுகளிலும் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பலரது வீடுகளிலிருந்து ஏராளமான ஆவணங்கள், ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டோரில் சுங்கத் துறையினர் தவிர வியாபாரிகள் 13 பேரும் திருச்சி விமான நிலைய வளாகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பிற்பகலில் 13 பேரும் பாதுகாப்புடன் வாகனங்களில் மதுரை கொண்டு செல்லப்பட்டனர்.