திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு புதன்கிழமை வருகிறார். இதற்காக அரசு நிகழ்ச்சிகளையும், முக்கிய அலுவல்களையும் அவர் ஒத்திவைத்திருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறப்பு விமானம் மூலம் தில்லியில் இருந்து புதன்கிழமை காலை புறப்படும் பிரதமர் மோடி, அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் சென்னை வந்தடையவுள்ளார். பின்னர், நேரடியாகச் சென்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் அவர், அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாலையில் தில்லிக்கு கிளம்புகிறார்.
கருணாநிதியின் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் மேம்பாட்டுக்கும் அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
நாட்டின் முதுபெரும் தலைவரான கருணாநிதி, தமிழகத்தின் நலனுக்காக மட்டுமன்றி தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பங்காற்றியவர். விளிம்பு நிலை மக்களின் தலைவர் அவர். சிந்தனையாளர், படைப்பாளி, அனைத்திலும் மேலாக ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டவர் அவர்.
பிரதமர் மோடி
கருணாநிதியின் மறைவு குறித்து அதிர்ச்சியும், ஆழ்ந்த துயரமும் அடைந்தேன். அவர் தனது ஆட்சிக் காலத்தின் போது ஏழை மக்களின் நல்வாழ்வுக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். அவர் செய்த பணிகள் மறக்க முடியாதவை.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
கருணாநிதி தனது 14ஆவது வயதிலேயே சமூக இயக்கங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பாகும்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி