தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி தொடர்ந்து 60 ஆண்டுகள் இடம் பெற்றவர். சட்டப்பேரவைத் தேர்தலில் 13 முறை போட்டியிட்டு, தோல்வி அடையாமல் வெற்றி பெற்றவர்.
முதல் வெற்றி: திமுக 1957-ஆம் ஆண்டு முதன்முதலில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் உள்ளிட்ட 15 பேர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதன்முதலாக அன்றைய திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றார். 1957 ஏப்ரல் 1-ஆம் தேதி சட்டப்பேரவையில் பதவியேற்றார். திமுக சட்டப்பேரவை கொறடாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டியிட்ட தொகுதிகள்: 1957-இல் குளித்தலை, 1962-இல் தஞ்சாவூர், 1967, 1971 ஆண்டுகளில் சைதாப்பேட்டை, 1977, 1980-ஆம் ஆண்டுகளில் அண்ணாநகர், 1989, 1991-ஆம் ஆண்டுகளில் துறைமுகம், 1996, 2001, 2006-ஆம் ஆண்டுகளில் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-இல் அவரின் சொந்தத் தொகுதியான திருவாரூரிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். இறுதிவரை தேர்தலில் தோல்வியே காணாத அரசியல்வாதி.
வகித்த பொறுப்புகள்: 1962-இல் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், 1967-இல் பொதுப்பணித் துறை அமைச்சர், அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் 1969-இல் முதல்வர், 1971-இல் மீண்டும் முதல்வர், 1977 மற்றும் 1980-இல் எதிர்க்கட்சித் தலைவர், 1989-இல்13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முதல்வர், 1996-இல் முதல்வர், 2006-இல் இறுதியாக முதல்வர் பொறுப்பேற்றார்.
கன்னிப் பேச்சு: முதன்முதலில் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கருணாநிதி பேசிய கன்னிப் பேச்சு அவரது தொகுதியான குளித்தலைக்குட்பட்ட நங்கவரம் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களின் அவலத்தை எடுத்துரைத்தது. விவசாயத் தொழிலாளர்கள் உழைப்பைச் சுரண்டும் வரையில் அங்கு குடிவார முறை நடைமுறையில் இருந்தது. இதனால் ஆண், பெண், குழந்தைகள் ஆகியோர் படும் துயரத்தை தனது மொழிநடையால், ஏற்ற இறக்கத்தோடு பேரவையில் எடுத்துவைத்தார். அதற்கு பிறகு நங்கவரம் விவசாயத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்பட்டது.
பேரவையில் நகைச்சுவை: கருணாநிதி சட்டப்பேரவையில் இருந்தால் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும். விவாதங்களின்போது நகைச்சுவையுடனும், சமயோசிதமாகவும் பதிலளிப்பார். 60 ஆண்டுகளில் பேரவையில் கருணாநிதி தொடாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். மாநில சுயாட்சி மற்றும் அதிகாரங்கள் குறித்து அதிக அளவில் பேசியிருக்கிறார். தேசிய அளவில் அரசியலில் அவர் புகழ்பெற்றாலும், நாடாளுமன்றம் நோக்கி நகராமல், இறுதி வரை சட்டப்பேரவை உறுப்பினராகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
எதிர்க்கட்சி இல்லாமல் அவை இல்லை: சட்டப்பேரவையில் மட்டுமின்றி, சட்ட மேலவையிலும் உறுப்பினராக இருந்தார். ஆளும் கட்சியாக இருக்கும்போது, எதிர்க்கட்சி இல்லாமல் அவை நடைபெறக்கூடாது என்ற நிலைப்பாடு உடையவர்.