ராஜாஜி அரங்கில் ஐ.ஜி. தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: ஆளில்லா விமானம் கண்காணிப்பு

சென்னை ராஜாஜி அரங்கில் ஐ.ஜி. தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அஞ்சலி செலுத்த வருவோரைக் கண்காணிக்க ஆளில்லாத விமானம் பறக்கவிடப்படுகிறது.
ராஜாஜி அரங்கில் ஐ.ஜி. தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: ஆளில்லா விமானம் கண்காணிப்பு
Published on
Updated on
1 min read


சென்னை ராஜாஜி அரங்கில் ஐ.ஜி. தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அஞ்சலி செலுத்த வருவோரைக் கண்காணிக்க ஆளில்லாத விமானம் பறக்கவிடப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு புதன்கிழமை அதிகாலை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. இங்கு கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டு வருகின்றனர். இதையொட்டி, ராஜாஜி அரங்கிலும், அதை சுற்றியிலும் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி. எச்.எம். ஜெயராம் தலைமையில் அங்கு 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
அஞ்சலி செலுத்துவோரைக் கண்காணிக்கும் வகையில், ஆளில்லாத விமானம் பறக்கவிடப்படுகிறது. சுவாமி சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, அண்ணா சாலை பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கப் பகுதியில் தற்காலிகமாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அனுமதி: அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள், அண்ணா சாலையில் பல்நோக்கு அரசு மருத்துவமனை அருகே உள்ள வாயில் வழியாக அனுமதிக்கப்படுகின்றனர். அஞ்சலி செலுத்திய பின்னர் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள வாயில் வழியாக வெளியே செல்லலாம்.
முக்கிய பிரமுகர்கள் (விஐபி) சுவாமி சிவானந்தா சாலையில் வாயில் வழியாக உள்ள அனுமதிக்கப்பட்டு, அதே வாயில் வழியாக வெளியே செல்லலாம். அதிமுக்கிய பிரமுகர்கள் (விவிஐபி), கலைவாணர் அரங்கின் வாலாஜா சாலை வாயில் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டு வெளியே செல்லலாம். ராஜாஜி அரங்கின் அனைத்து வாயில்களிலும் தலா ஒரு துணை ஆணையர் பாதுகாப்புப் பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ராஜாஜி அரங்கை புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் போலீஸார், தங்களது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.