தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தொடர்ந்து செயல்படும். அந்தப் பிரிவை தமிழக அரசு மூடவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் பணிகளில் எந்தத் தொய்வும் ஏற்படாது. இதுவரை மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் கண்காணிப்பில் உள்ளன. சிலைகளை அந்தந்த கோயில்களில் கொண்டு சேர்ப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறோம்.
கடத்தப்பட்டுள்ள பிற சிலைகளை மீட்பதற்காக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தொடர்ந்து செயல்படும். அந்தப் பிரிவை தமிழக அரசு மூடவில்லை. எனவே, அந்தத் துறையின் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாது. அதில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் நீடிப்பாரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஒரு சில வழக்குகள் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. அது குறித்து நீதிமன்றத்திலும் விளக்கம் அளித்துள்ளோம்.
இது தொடர்பான சில வழிமுறைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. சிலைகள் கடத்தப்பட்டது யார் ஆட்சியிலும் நடந்திருக்கலாம். ஆனால், கடத்தப்பட்ட சிலைகள் அதிமுக ஆட்சியில் தான் மீட்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.