மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் மனைவி மாற்று வீடு வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு பரிசீலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, குமரிமுத்துவின் மனைவி புண்ணியவதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எனது கணவரின் நடிப்புத் திறனை பாராட்டி தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தது. எங்களுக்கு நந்தனம் புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 2016 - ஆம் ஆண்டு எனது கணவர் இறந்துவிட்டார். அந்த வீட்டில் நான் வசித்து வருகிறேன். இந்த நிலையில், வீட்டு வசதி வாரியம் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்து நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வீடுகளை இடிக்கப் போவதாகக் கூறி அதிகாரிகள் வீட்டை காலி செய்யுமாறு தொந்தரவு கொடுக்கின்றனர்.
தற்போது வசித்து வரும் குடியிருப்புகளை இடிக்கும் வரை நான் அங்கு வசிக்க அனுமதி அளிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் திருமங்கலம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எனக்கு மாற்று வீடு ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "இதுபோன்ற கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் அரசுகளின் பாராட்டுகள் வெறும் காகித அளவில் நிற்காமல், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவுக் கரம் நீட்டும் வகையில் இருக்க வேண்டும். எனவே, மனுதாரருக்கு மாற்று வீடு ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.