வாஜ்பாய் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் (93) கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர், சிறுநீரக பாதை தொற்று, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது.
இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பில், துரதிருஷ்டவசமாக, கடந்த 24 மணி நேரமாகவே, வாஜ்பாய் உடல்நிலை மோசமாகி வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
முன்னாள் பாரத பிரதமர், வாழும் மகாத்மா மிக சிறந்த ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்கிய, நம் அனைவரும் பெரிதும் நேசிக்கும் ஒப்பற்ற தலைவர் வாஜ்பாய்யின் உடல் நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது. அவர் நலம் பெறுவது தான் நம் அனைவருக்கும் ஆத்ம பலம் தரும் என்பது தான் உண்மை, அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன், இந்நேரத்தில் நம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை நடத்துவோம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.