தில்லியில் தமிழக கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: நீட் தேர்வை ரத்துச் செய்ய வலியுறுத்தல்

மருத்துவமாணவர் சேர்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நாடாளுமன்றச் சாலையில் செவ்வாய்கிழமை தமிழக கட்சித் தலைவர்கள்
தில்லி நாடாளுமன்றச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா, மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் கனிமொழி,
தில்லி நாடாளுமன்றச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா, மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் கனிமொழி,

மருத்துவமாணவர் சேர்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நாடாளுமன்றச் சாலையில் செவ்வாய்கிழமை தமிழக கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
நீட் தேர்வை ரத்துச் செய்ய வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். மருத்துவ உயர்கல்வி உள்பட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கென இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 
மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவர் அணி, திராவிட மாணவர் கழகம், முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, மாணவர் இந்தியா, சமூகநீதி மாணவர் இயக்கம், அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம் உள்ளிட்ட தமிழகஅமைப்புகள் இதில் கலந்து கொண்டன. 
ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், முன்னாள் உறுப்பினர் பெ.விஸ்வநாதன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் , தமிமுன் அன்சாரி, சி.வி.எம்.பி.எழிலரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் 'இடஒதுக்கீடு பிறப்புரிமை', 'இட ஒதுக்கீட்டை அனைத்துத் துறைகளிலும் உறுதி செய்ய வேண்டும்', 'எமது கல்வி எமது உரிமை' என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு, சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவை ஆகிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
ஆர்ப்பாட்டத்தின் போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், 'தமிழகத்தைப் பொருத்தவரை பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வை ஒழித்துக் கட்ட வேண்டும் எனப் போராடி வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. அரசியல் சட்டத்தின்படி மாநில உரிமையைப் பாதுகாக்கவே இப்போராட்டம் நடைபெறுகிறது. எங்களது கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராடுவோம்' என்றார்.
திருச்சி சிவா பேசுகையில், 'நீட் தேர்வை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதால் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்கும் முயற்சியே நீட் தேர்வு. 
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய அரசிடம் முடங்கிப் போய் உள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்ப வேண்டும். நீட் தேர்வு மாநில உரிமையைப் பறிக்கும் செயலாகும்' என்றார். 
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலையில் தில்லி கான்ஸ்டிடியூஸன் கிளப்பில் 'சமூக நீதி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். கருத்தரங்கில் தில்லி மாணவர் அமைப்புக்களும் பங்கேற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com