மோரீஷஸ் தமிழர்கள் பேச்சுத் தமிழை மறந்துவிட்டனர்: அமைச்சர் வேதனை

மோரீஷஸ் தமிழர்கள் பேச்சுத் தமிழை மறந்துவிட்டனர் என்று அந்நாட்டின் கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சிங் ரூபன் கூறினார்.

மோரீஷஸ் தமிழர்கள் பேச்சுத் தமிழை மறந்துவிட்டனர் என்று அந்நாட்டின் கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சிங் ரூபன் கூறினார்.
மோரீஷஸில் உள்ள தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்கை, மோரீஷஸ் தமிழ்ப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து அங்குள்ள இந்திரா காந்தி ஆராய்ச்சி மையத்தில் அண்மையில் நடத்தின. மோரீஷஸ் அதிபர் பரமசிவம்பிள்ளை வையாபுரி, பயிலரங்கைத் தொடங்கி வைத்தார்.
அதன் நிறைவு விழாவில், அந்நாட்டு கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சிங் ரூபன் பேசும்போது, 'மோரீஷஸ் தமிழர்கள் பேச்சுத் தமிழை மறந்துவிட்டனர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கம் புதிய நம்பிக்கையை ஊன்றியுள்ளது. இந்தப் பயிலரங்கத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் கருத்துப் பகிர்வு கடிதங்களின் மூலம் இதை உணர்கிறேன்' என்றார்.
நிகழ்ச்சியில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.பாஸ்கரன் பேசும்போது, 'ஆண்டுதோறும் இந்தப் பயிலரங்கம் மோரீஷஸில் நடத்தப்படும். இங்குள்ள தமிழ் மாணவர்கள் எளிதில் தமிழைப் படிக்க உதவும் வகையில், மோரீஷஸின் அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம் விரைவில் நூல்களை அனுப்பி வைக்கும்' என்றார் அவர். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அயல்நாட்டுத் தமிழாசிரியர்களுக்கான சிறப்புத் தமிழ்த்திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தின்கீழ் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 55 தமிழாசிரியர்கள் பங்கேற்றனர். தமிழ் இலக்கியம், கற்றல் -கற்பித்தல் உள்ளிட்டவை குறித்துப் பல நிலைகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com