Enable Javscript for better performance
பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியு- Dinamani

சுடச்சுட

  

  பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 18th April 2018 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tiruma

  பிறந்த தின விழா கருத்தரங்கில் கலந்துகொண்டு அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்திய திருமாவளவன். 

  மாணவிகளை தவறான பாதைக்கு இட்டுச்செல்ல முயன்ற துணைப் பேராசிரியர் நிர்மலாதேவியின் வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
  ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில், அம்பேத்கரின் 127ஆவது பிறந்த தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் மேம்பாட்டுக்கு ஆற்றிய பணிகள் குறித்து பலரும் உரை நிகழ்த்தினர். கருத்தரங்கிற்கு இந்த மையத்தின் பதிவாளரான சந்திரமோகன் தலைமை வகித்தார். மையத்தின் எஸ்சி-எஸ்டி பொது நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.லலிதா வரவேற்றார்.
  கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில், 'அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு மட்டும் தலைவராக இருந்ததில்லை. அவர் எல்லாத் தரப்பு மக்களுக்கும், குறிப்பாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தலைவராக இருந்தார். அனைத்து மதத்தினரையும் சமமாக பாவித்தார். மாணவர்கள் நமது நாட்டின் வரலாறு, கலாசாரம், பண்பாடு, அரசியல் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். இளைஞர்கள் அரசியலை தெரிந்து கொண்டு முடிந்த அளவு அதில் ஈடுபட வேண்டும். சமூக மாற்றத்திற்கும் வித்திட வேண்டும்' என்று தெரிவித்தார். 
  பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது:
  விருதுநகர் கலைக்கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் கொண்டு செல்ல முயன்ற துணைப் பேராசிரியர் நிர்மலாதேவியைக் கைது செய்தது மட்டும் போதாது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரித்தால் மட்டுமே உண்மைகள் தெரியவரும். தற்போது நாட்டில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிப்பதால் பெண் கல்வியின் விகிதம் குறைந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து பெண் கல்வியின் மேம்பாட்டிற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் சங்க பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்த நீதிபதி தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இந்தத் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு இருந்த காரணத்தாலேயே நீதிபதி ராஜிநாமா செய்துள்ளார். 
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள மனித சங்கிலிப் போராட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உணர்த்த வேண்டும். 
  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9ஆவது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தி தலித் அமைப்புகளின் சார்பாக சென்னை பனகல் மாளிகை முன்பு வரும் 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற உள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமின்றி அனைத்து தலித் அமைப்புகளும் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். 
  இதனிடையே, காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி ஆசிபா பானுவின் கொலையைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, வரும் 21ஆம் தேதி நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தந்து, பங்கேற்கும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai